திருச்சி கிழக்கில் போட்டியா? போட்டுடைத்த திருமா..!

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் திருமா. 

Jun 29, 2026 - 12:30
Updated: 27 days ago
0 279
திருச்சி கிழக்கில் போட்டியா? போட்டுடைத்த திருமா..!

2026 சட்டமன்றத் தேர்தலின் போது போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வென்ற தவெக தலைவர் விஜய், முதலமைச்சராக பொறுப்பேற்றதும் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அதிமுக சார்பில் பெருந்துறை தொகுதியில் வென்ற ஜெயக்குமார், மதுராந்தகம் தொகுதியில் வென்ற மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் வென்ற சத்தியபாமா ஆகிய மூவரும் கடந்த மே 25ம் தேதி தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

மே 26 ஆம் தேதி அதாவது மறுநாளே, அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் வென்ற இசக்கி சுப்பையாவும் பதவி விலகினார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சரும், விராலிமலை எம்.எல்.ஏவுமான சி. விஜயபாஸ்கர் ஜூன் 16ம் தேதி தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது எம்.ஆர். விஜயபாஸ்கரும் கரூர் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இதனால் தமிழ்நாட்டில் தற்போது 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாகியுள்ளன. ஏற்கனவே, காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடத்துவதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள நிலையில், கரூர் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டால் இந்த தொகுதிக்கும் சேர்த்தே ஒரே அடியாக இடைத்தேர்தல் நடத்தப்படும். 

இதற்கிடையில், இந்த இடைத்தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவருமான திருமாவளவன் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி இருந்தது. 

இந்த நிலையில், அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களது பதவிக்காலத்தை நிறைவு செய்ய வேண்டியது ஜனநாயகப் பொறுப்பாகும் என்றும், தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவது அரசியல் அமைப்பின் நிலைத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்தார்.
மேலும், திருச்சி கிழக்குத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட விசிக வாய்ப்புக் கேட்டதாக வெளியாகியுள்ள தகவல்களை அவர் திட்டவட்டமாக மறுத்தார். அந்த தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என்றும், அதுகுறித்து பரப்பப்படும் செய்திகள் வெறும் ஊகங்களே என்றும் கூறினார்.

அதேபோல், வரவிருக்கும் இடைத்தேர்தலில் தாம் தனிப்பட்ட முறையில் போட்டியிடப் போவதில்லை என்றும் திருமாவளவன் தெளிவுபடுத்தினார். இடைத்தேர்தல் தொடர்பான முடிவுகள் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல் வட்டாரங்களில் இடைத்தேர்தல் தொடர்பாக பல்வேறு யூகங்கள் பரவி வரும் நிலையில், திருமாவளவனின் இந்த விளக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதி குறித்த அரசியல் விவாதங்களுக்கு அவரது கருத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மேலும், ஆளுங்கட்சியான தவெகவிற்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால், இந்த இடைத்தேர்தல் வழக்கத்தை காட்டிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவருமே விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்டுவது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User