வயநாடு நிலச்சரிவு: பலி 4 ஆக உயர்வு... மீட்புப் பணி தீவிரம்!

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமான நிலையில் ஏற்கனவே 3 ஆக இருந்த உயிரிழப்பு தற்போது 4 ஆக உயர்ந்துள்ளது. 

Jul 09, 2026 - 05:21
0 238
வயநாடு நிலச்சரிவு: பலி 4 ஆக உயர்வு... மீட்புப் பணி தீவிரம்!

வயநாடு மாவட்டம் கள்ளாடியில் உள்ள மீனாட்சி பாலம் அருகே இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலப்புறம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் சுரங்கப் பாதை சாலைத் திட்டப்பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே இந்த விபத்து நடந்துள்ளது. இப்பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 265 மி.மீ அளவுக்குக் கடுமையான மழை பதிவாகியுள்ளது. இந்தத் தொடர் மழையே நிலச்சரிவுக்கு முக்கியக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இரண்டு பேரை மீட்டதுடன், மேலும் ஐந்து பேரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மீட்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மண்ணிற்கு அடியில் 20க்கும் மேற்பட்டோர் புதைந்திருக்கலாம் என்று கூறிய நிலையில் நேற்று மாலை வரை 8 பேர் உயிருடனும் மீட்கப்பட்டனர். தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மோப்பநாய் உதவியுடன் மண்ணில் புதைந்து காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.

20 முதல் 30 அடி உயரம் வரை மண் புதைந்த நிலையில், இன்னும் 10 அடி மட்டுமே மண்ணை அகற்ற வேண்டி உள்ளது. பேரிடர் மீட்பு குழுவினருடன், தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் வனத்துறையினர், உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

ஏற்கனவே உயிரிழப்பு 3 ஆக இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டு 4 ஆக அதிகரித்துள்ளது.  இதனிடையே, நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பும், பேரிடர் ஏற்பட்டதற்கு பிறகும் எடுக்கப்பட்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User