சொல்லி அடித்த ஸ்பெயின்… தகர்க்கப்பட்ட பிரான்ஸின் உலகக்கோப்பை கனவு..! 

டெக்சாஸில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, பிரான்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்து அசத்தியது. 

Jul 15, 2026 - 05:30
Updated: 12 days ago
0 253
சொல்லி அடித்த ஸ்பெயின்… தகர்க்கப்பட்ட பிரான்ஸின் உலகக்கோப்பை கனவு..! 

ஆட்டத்தின் தொடக்கம் முதலே பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்பெயின், பிரான்ஸ் வீரர்களுக்கு தாக்குதல் வாய்ப்புகளை உருவாக்கவே இடமளிக்கவில்லை. அதன் பலனாக 20-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை மிக்கேல் ஓயர்சபால் வெற்றிகரமாக கோலாக மாற்றி அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். 

முதல் பாதியில் பிரான்ஸுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டது. காயம் காரணமாக சென்டர்-பேக் வில்லியம் சாலிபா வெளியேறியதால் அந்த அணியின் தற்காப்பு அமைப்பு பாதிக்கப்பட்டது. இரண்டாம் பாதியில் பிரான்ஸ் மீண்டும் ஆட்டத்துக்குள் வர முயன்றாலும், ஸ்பெயின் அதற்கு இடமளிக்கவில்லை. 58-வது நிமிடத்தில் டானி ஒல்மோவுடன் இணைந்து சிறப்பான நகர்வை உருவாக்கிய பெட்ரோ போரோ, கோல்கீப்பர் மைக் மேன்யானை ஏமாற்றி இரண்டாவது கோலை பதிவு செய்தார்.

நடுகளப் பகுதியில் முழுமையான ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின், பிரான்ஸின் வேகமான எதிர்தாக்குதல்களை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியது. ரபியோ, ஓரேலியன் சுவாமேனி ஆகியோரால் ஸ்பெயின் மிட்ஃபீல்டின் ஆட்டத்தை சமாளிக்க முடியவில்லை. இதன் காரணமாக கைலியன் எம்பாப்பே, ஒஸ்மான் டெம்பேலே, பிராட்லி பார்கோலா, மைக்கேல் ஒலிசே உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினர். கூடுதல் நேரத்தில் எம்பாப்பேவுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பும் கோலாக மாறாமல் போனது. அதனுடன் பிரான்ஸின் இறுதிப்போட்டி கனவும் முடிவுக்கு வந்தது.

தந்திரமான ஆட்டம், ஒழுங்கான தடுப்பாட்டம் மற்றும் பந்துக் கட்டுப்பாட்டில் வெளிப்பட்ட ஆதிக்கம் ஆகியவற்றின் மூலம் ஸ்பெயின் வெற்றியை உறுதி செய்தது. இதன் மூலம் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அல்லது அர்ஜென்டினாவை எதிர்கொள்ள ஸ்பெயின் அணி தயாராகியுள்ளது.

முன்னதாக, பிரான்ஸுக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக, ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரம் லமின் யமால், "பிரான்ஸை வீழ்த்துவதே எனது பிறந்தநாள் பரிசாக இருக்கும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார்.

அவர் கூறியதுபோலவே, அரையிறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின், பிரான்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இதன் மூலம் யமாலின் பிறந்தநாள் ஆசையும் நனவானது.

2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற நம்பிக்கையுடன் களமிறங்கும் ஸ்பெயின், உலகக் கோப்பையையும் கைப்பற்றும் இலக்குடன் இறுதிப்போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User