இந்திய அணி தோற்றது ஆச்சரியமில்லை... அம்பதி ராயுடுவின் சர்ச்சை கருத்து..!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி சந்தித்த தோல்வி ஆச்சரியமளிப்பதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

Jun 29, 2026 - 16:15
0 322
இந்திய அணி தோற்றது ஆச்சரியமில்லை... அம்பதி ராயுடுவின் சர்ச்சை கருத்து..!

பெல்பாஸ்டில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் குவித்தது. ஹாரி டெக்டர் 53 ரன்களும், பென் காலிட்ஸ் 37 ரன்களும் எடுத்தனர்.

155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. முதல் ஓவரிலேயே சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா கோல்டன் டக்கில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் விரைவில் வெளியேறியதால் இந்திய அணி நெருக்கடியில் சிக்கியது.

திலக் வர்மா மட்டும் பொறுப்புடன் விளையாடி 55 ரன்கள் எடுத்தார். சிவம் துபே 20 ரன்களும், ஹர்ஷித் ராணா 21 ரன்களும் சேர்த்தாலும், இந்திய அணி இறுதியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் இந்தியாவின் தொடர்ச்சியான 16 டி20 தொடர் வெற்றிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அம்பத்தி ராயுடு, அயர்லாந்தின் மந்தமான மற்றும் சவாலான ஆடுகளங்களுக்கு ஏற்ப இந்திய அணி போதிய தயாரிப்பை மேற்கொள்ளவில்லை என்று கூறினார்.

இதுகுறித்து பேசிய அவர், "அயர்லாந்தின் ஆடுகள நிலைக்கு ஏற்ற வகையில் இந்திய அணி போதுமான தயாரிப்பை மேற்கொள்ளவில்லை. ரன்கள் குவிக்க சாதகமான பேட்டிங் ஆடுகளங்களில் தொடர்ந்து விளையாடிவிட்டு, திடீரென சவாலான மற்றும் மந்தமான ஆடுகளங்களில் களமிறங்குவது எளிதான விஷயம் அல்ல.

இந்திய அணியில் உள்ள பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை விரும்பும் வீரர்கள். அதனால் அயர்லாந்தின் மெதுவான ஆடுகளங்கள் மற்றும் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலைகள் அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

மேலும், இளம் வீரர் திலக் வர்மா மெதுவான பந்துகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சரியான கால் அசைவுகளுடன் ஷாட்களை தேர்வு செய்து விளையாடும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, மந்தமான ஆடுகளங்களில் விளையாடும் அனுபவத்தை அதிகரித்துக் கொள்வது அவரது வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். எனவே இந்திய அணி தோற்றது ஆச்சரியமில்லை" என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய வீரரான அம்பதி ராயுடுவின் இந்த கருத்து சர்ச்சையானதையடுத்து, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User