கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு...கவிஞனை என்ன செய்துவிடும் காலம்!

கவியரசர் கண்ணதாசனின் கவிதை, பாடல்கள் மற்றும் படைப்பாற்றல் குறித்து தனது முதல் ஈர்ப்பிலிருந்து இலக்கியப் புரிதல் வரை மனம் திறந்து பகிரும் நெகிழ்ச்சியான நினைவுப் பதிவு.

Jul 14, 2026 - 11:56
Updated: 12 days ago
0 140
கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு...கவிஞனை என்ன செய்துவிடும் காலம்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், கவியரசு கண்ணதாசனையும் அப்பாவையும் ஒப்பிட்டு ஒரு மேடையில் பேசுகிறார். கண்ணதாசன் ரசிகர்கள் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 'ஒரு ஓவியத்தை ரவிவர்மாவின் ஓவியத்தோடு ஒப்பிடுவது ரவிவர்மாவுக்குத்தானே பெருமை!

ஒருவரை உயர்த்திச் சொல்ல, அவரைக் கண்ணதாசனோடு ஒப்பிடுவது கண்ணதாசனுக்குத்தானே பெருமை!' என்கிற அளவில் முத்தமிழறிஞர் கலைஞர் அந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். இப்படியொரு கலவரச் சூழலில்தான் கண்ணதாசன் எனக்கு அறிமுகமாகிறார். யார் இந்தக் கண்ணதாசன்?

அந்த வார குமுதம் இதழைப் புரட்டியபோது, முதன்முதலில் அவரது முகத்தைக் கண்டேன். நான் அப்போது கவிதை எழுதத் தொடங்கியிருந்தேன். என் முதல் நூலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். பாரதியாரையும் பாரதிதாசனையும் அப்பாவையும் பார்த்துவிட்டுக் கவிஞனாய் வளர வேண்டுமெனில், முதலில் மீசை
வளரவேண்டும் என்று உறுதியாக நம்பினேன். என் பள்ளிப் பருவ நம்பிக்கையை உடைத்தது கவியரசு கண்ணதாசனின் கறுப்பு வெள்ளைப் புகைப்படம். அட மீசை இல்லாமல் ஒரு தமிழ்க் கவிஞரா?!

அதுவும் குழந்தை முகம். சிரிக்கும் கண்கள். பௌர்ணமி போலப் பரந்த நெற்றி நெற்றிக்கண் போலக் குங்குமம் இவரை நேரில் பார்க்க வேண்டும் போலிருக்கிறதே! சாத்தியமில்லை. நான் பிறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பே அவர் இறந்துவிட்டார். எங்கேயோ ஒலித்த அவரது என் ஏதோ ஒரு பாடல் தொட்டிலுக்குள் என்னைத் தாலாட்டியிருக்கக் கூடும்.

புகைப்படத்தைப் பார்த்தபின்பு அவரது கவிதைகளை வாசிக்கிறேன். பாடல்களைக் கேட்கிறேன். தொலைக்காட்சியில் கவியரசரின் பாடல் வரும்போது கைதட்டிக்கொண்டே எழுந்து, அவன் மகா கவிஞன்' என்று அப்பா உணர்ச்சி வசப்பட்ட அதிர்வில் என் கையில் இருந்த கோப்பையைத் தவறவிட்டிருக்கிறேன் அதற்குப் பின் எத்தனையோ கவிஞர்களை வாசித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன். ஒரு கவிஞனாக நாவலாசிரியராக இயங்கியிருக்கிறேன் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களையும் இயற்றியிருக்கிறேன். பலூன்காரனிடம் வாங்கிய கண்ணாடியை மாட்டிக்கொண்டு வானத்தைப் பார்ப்பதுபோல, என் பிள்ளை அனுபவத்திலிருந்து கண்ணதாசன் என்ற பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன்.

ஒரு கவிதையை இன்னொரு மொழிக்கு மாற்றும்போது, மூலப் படைப்பின் சாரம் கொஞ்சம் தொலைந்துபோகிறது என்பது நாமறிந்தது. அறியாதது யாதெனில் மனதில் எண்ணுகிற கருத்து, மொழிக்கு வரும்போதே அது சின்னதொரு சேதாரத்தோடுதான் வெளிப்படுகிறது. ஆனால், கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்களில், அவரது மனதுக்கும் மொழிக்கும் எந்த இடைவெளியும் இல்லை என்பதை என்னால் உணர முடிந்தது. ஒரு மழைத்துளி கூட பூமிக்கு வந்த பின் மழைத்துளியாக இருப்பதில்லை. ஆனால், இசையான பின்னும், குரலான பின்னும், காட்சியான பின்னும் கவியரசு கண்ணதாசனின் பாடல் தன் இதயத் தூய்மையை இழக்கவில்லை.

கவியரசரின் பாடல்களைக் கேட்கும்போது, அவை ஒரு மனிதனால், அவனது பயிற்சியால் உருவானவையா? அல்லது, காட்டில் மலரும் பூக்களைப்போல பாட்டுகள் பூக்கும் தோட்டம் உண்டா என்று தோன்றும். கட்டமைக்கப்பட்ட தன்மையின்றி, கருவுற்ற ஈரத்துடன் அவரது பாடல்கள் அமைந்திருப்பதாக நம்புகிறேன். தனக்குரிய இந்தத் தன்மையை, திரைப்படத்தில் வரும் கற்பனைக் கதாபாத்திரங்களுக்கும் அவரால் வழங்க முடிந்திருக்கிறது. தான் பாடல் எழுதிய கதாபாத்திரங்களாக அவரால் மாற முடிந்திருக்கிறது.

பல்லாண்டு வாழ்கிறவன் சராசரி மனிதன். பலராக வாழ முடிந்தவன் தான் மகா கலைஞன். கவியரசு கண்ணதாசனுக்கு அது வசப்பட்டிருக்கிறது. அதுவல்ல, அவர் தனித்துவம். அதையும் தாண்டிய ஓர் உயரத்தை அவர் தொட்டிருக்கிறார். என் கருத்தை இடம் சுட்டிப் பொருள் விளக்க, இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' என்ற ஒரு படம் போதும் மருத்துவராகக் கல்யாணகுமார். அவரது முன்னாள் காதலியாக தேவிகா. தேவிகாவின் கணவனாக நோயுற்ற முத்துராமன்.

"ஒரு கொடியில் ஒருமுறைதான் மலரும் மலரல்லவா..
ஒரு மனதில் ஒருமுறைதான் வளரும் உறவல்லவா"
இது 'சொன்னது நீதானா.
"ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை"

இது 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்'
"வருவாய் என நான் தனிமையில்
நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன்
வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும்
தந்தாய்
தூயவளே நீ வாழ்க..."
இது எங்கிருந்தாலும் வாழ்க

மூன்று பாடல்களையும் மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்கள் பாடுகிறார்கள். மூன்று வெவ்வேறு மனநிலையோடு பாடுகிறார்கள். ஆனால், இந்த மூன்று பாடல்களுக்குள்ளும் ஒரே விதமான நாகரிகத்தைக் கவியரசு கண்ணதாசன் உருவாக்கியிருக்கிறார். அது அல்ல அவர் சாதனை. 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தின் பாடல்களை எந்தக் கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்தின் வழி அவர் எழுதியிருக்கிறார்? கண்ணதாசன் கல்யாணகுமாராக மாறியிருக்கிறாரா? முத்துராமனாகவா? தேவிகாவாகவா?

ஒவ்வொரு பாடலைக் கேட்கும் போதும் அவர் அந்தந்தக் பாத்திரமாக மாறியிருக்கிறார் என்று தோன்றலாம். ஆனால், உண்மையில் அவர் யாராகவும் மாறவில்லை; மூன்று கதாபாத்திரங்களுக்கும் இடையே சிக்கித்தவிக்கும் காதலாக அவர் மாறியிருக்கிறார். அந்தக் காதலின் வலியாகவே அவர் ஒலிக்கிறார். 'நான்' மறையக் கற்றுக்கொண்ட ஞானிகளுக்கு மட்டுமே இது சாத்தியம்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User