தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணி? வைகைச்செல்வனின் பதில் பரபரப்பு

அ.தி.மு.க.வில் இருந்து விலகிய காரணம், எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனம் மற்றும் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசுக்கு ஆதரவு குறித்து வைகைச்செல்வன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

Jul 14, 2026 - 14:30
0 174
தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணி? வைகைச்செல்வனின் பதில் பரபரப்பு

அதிமுக குரலாக தி.மு.க.வின் ஆமுழங்கியவர், அ.தி.மு.க. ஆட்சிகளில் அரசு தலைமை கொறடா, அமைச்சர், சொற்பொழிவாளர் என பன்முகம்கொண்டவர் வைகைச்செல்வன். பனையூரில் வாரம்தோறும் நடக்கும், 'சனிக்கிழமை சந்தை'யில் பங்கேற்று, தற்போது த.வெ.க.வில் தஞ்சமடைந்துள்ள வைகைச்செல்வனிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். 

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல், அ.தி.மு.க.வை விட்டு நீங்களும் விலகிவிட்டீர்களே?

"குளத்தில் நீர் இல்லாததால் பறவை பறந்ததுபோல், ஆட்சியில் இல்லாததால் நான் பறந்துவிடவில்லை. 1996 மற்றும் 2016ல் கட்சி தோல்வி அடைந்தபோது நான் கட்சியைவிட்டு போகவில்லை. அம்மாவின் மறைவிற்குப் பிறகு கட்சி பிளவுபட்டது. தர்மயுத்தம் நடந்தது. 'யார் முதல்வர்? என கூவத்தூரில் கலாட்டா நடந்தது. அப்போதும் நான் வெளியேறவில்லை. ஒற்றைத் தலைமை, செயற்குழு, பொதுக்குழு என எல்லா நேரத்திலும் எடப்பாடியுடன்தான் இருந்தேன். தற்போது அவரது தவறான அணுகுமுறையால் அதிமு.க தொடர் தோல்விகளை சந்தித்தது. நான் விலக வேண்டிய சூழலும் ஏற்பட்டது."

தேர்தல் தோல்விகளுக்கு எடப்பாடி மட்டும்தான் காரணமா?

"அவர்தானே கேப்டன். அ.தி.மு.க. என்ற வாகனம் தொடர்ந்து விபத்துகளை சந்தித்து டேமேஜ் ஆகிவிட்டது. இதற்கு காரணமான டிரைவரை மாற்ற முயற்சி செய்தோம். டிரைவர் சீட்டிலிருந்து எடப்பாடி இறங்க மறுத்துவிட்டார். அதனால் அதி.மு.க. வண்டியில் இருந்து நான் இறங்கிவிட்டேன்."

தேர்தலில் அ.தி.மு.க.விற்கு பின்னடைவு ஏற்படும் என எடப்பாடியிடம் நீங்கள் தெரிவித்தீர்களா?

2026 தேர்தலில் வெற்றிபெறும் சூழல் இல்லை என பலமுறை அவரிடம் தெரிவித்தும், அதற்குரிய நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை. 'அதெல்லாம் பார்த்துக்கலாம். நாமதான் ஜெயிக்கிறோம்' என சொல்லிக்கொண்டே இருந்தார். 11 முறை தோல்வி அடைந்த பின்பும் அவர் மாறவில்லை."

அப்படியென்றால் தமிழக தேர்தல் களத்தில் இனி இரட்டை இலை துளிர்க்கவே துளிர்க்காதா?

"அ.தி.மு.க.வை நான் குறைத்து சொல்லவில்லை. அதை வழிநடத்தும் தலைவரிடம்தான் பிரச்னை. அ.தி.மு.க. ரைட் பார்ட்டி. இ.பி.எஸ். ராங் லீடர். சரியான நேரத்தில் தவறான முடிவெடுத்து, தொடர் தோல்விக்கு வழிவகுத்துள்ளார். கடந்த தி.மு.க. ஆட்சியின்மீது கடும் அதிருப்தி அலை வீசியது. எல்லா துறைகளிலும் ஊழல் நிலவியது. தி.மு.க எதிர்ப்பலையை அ.தி.மு.க அறுவடை செய்திருக்க வேண்டும். ஆனால், அதை தவெ.க. அறுவடை செய்து, ஆட்சியில் அமர்ந்துவிட்டது."

த.வெ.க. ஆட்சியில் அமர்ந்ததால்தான் நீங்கள் அந்த கட்சியில் சேர்ந்துவிட்டீர்களா?

"சாதாரண ஏழை, எளியவன். அரசியல், பொருளாதர பின்புலமற்றவன் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் கொள்கை. இந்த தேர்தலில் அப்படிப்பட்ட சாதாரண மனிதர்களை, ஒரு பைசா செலவில்லாமல் வெற்றிபெற வைத்து எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக முதல்வர் விஜய் பதவியில் அமர்த்தியுள்ளார். திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி மிகுந்த தலைவராக அவரை மக்கள் ஏற்றுக்கொண்டனர். திராவிட இயக்கத்தின் வழிவந்த நானும் ஏற்றுக்கொண்டேன்."

த.வெ.க. தூயசக்தி' என கூறிவிட்டு, ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களை கட்சியில் சேர்த்துக்கொள்வது விமர்சனத்தை கிளப்பியுள்ளதே?

"எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் அது நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றம் தண்டனை வழங்கினால் தான் அவர் குற்றவாளி. நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்தவரை கட்சியில் சேர்த்தால்தான் தவறு."

தமிழகத்தை பாதிக்கும் விஷயங்களில் மத்திய அரசை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். அதுபோல விஜய் எதிர்ப்பாரா?

"எதிர்க்கவேண்டிய விஷயத்தில் எதிர்ப்பார். ஆட்சிக்கு வந்து 50 நாட்கள்தானே ஆகின்றன. வில்லனை எப்படி அடிக்கப்போகிறார் என்று போகப் போக பாருங்கள்!"

சட்டம்-ஒழுங்கு பாதிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனவே?

கடந்த தி.மு.க. ஆட்சியில் அன்றைய முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் கையில் காவல்துறை இருந்தது. அதை மாற்றி, த.வெ.க. அரசில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. தகுதி, திறமை அடிப்படையில் அதிகாரிகள் அமர்த்தப்பட்டுள்ளனர். கொஞ்சநாள் பொறுமையாக இருக்க வேண்டும். அடுப்பில் வைத்தவுடன் நீர் கொதிக்காது!"

த.வெ.க. ஆட்சியில் ஊழல், முறைகேடு, பார்ட்டி ஃபண்ட் விவகாரம் ஒழிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா?

"திமுக, அதிமுக ஆட்சிகளில் அமைச்சர்களின் வீடுகளில் டெண்டர் எடுக்க சிபாரிசுக்காக ஏகப்பட்ட ஒப்பந்ததாரர்கள் காத்துக்கிடப்பார்கள். நேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வீட்டுக்கு சென்றிருந்தேன். அங்கே அப்படி ஒருவரைக்கூட பார்க்க முடியவில்லை. 'எனக்கு அமைச்சரை தெரியும். டெண்டர் வாங்கித் தருகிறேன் என யாராவது சொன்னால், அவரை போலீஸாரிடம் பிடித்துக்கொடுங்கள்' என புஸ்ஸி ஆனந்த் சொல்லியிருக்கார். இதுபோல எடப்பாடியோ, துரைமுருகனோ சொல்லி இருக்கிறார்களா?

ஆய்வு என்ற பெயரில் அமைச்சர்கள் ரீல்ஸ் போடுவது சர்ச்சையாகி வருகிறதே?

அமைச்சர்கள் ஏதாவது தவறு செய்ய மாட்டார்களா என தேடிப்பிடித்து, எதிர்க்கட்சிகள் அதை பெரிதுபடுத்துகின்றனர். அதிமு.க. ஆட்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசனை ஏதாவது பேசவைத்து வைரல் ஆக்குவதுபோல் இப்போது முயற்சி நடக்கிறது"

எதிர்கால அரசியலில் தி.மு.க - அ.தி.மு.க இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனரே?

த.வெ.க.விற்கு 35 சதவிகிதம் பேர்தான் வாக்களித்துள்ளனர். மீதி 65 சதவிகிதம் பேர் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதில், தலா 20 சதவிகித வாக்கு வங்கி உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒன்று சேர்ந்தால் 40 சதவிகித வாக்கு கிடைக்கும் என்பது அவர்களது கணக்கு, உண்மையில் அவர்கள் கூட்டு சேர்ந்தால் பூஜ்யம்தான் கிடைக்கும்."

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User