அதிமுக இப்படி செஞ்சுது... ஆனா திமுக...? - இபிஎஸ் கடும் விமர்சனம்

அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போதைய திமுக ஆட்சியில், எப்பொழுது மின்சாரம் வரும் எப்பொழுது போகும் என்ற நிலை உள்ளது என பேசியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

Sep 20, 2024 - 08:37
0 237
அதிமுக இப்படி செஞ்சுது... ஆனா திமுக...? - இபிஎஸ் கடும் விமர்சனம்

திருச்சி மாவட்டம் முசிறி எம்ஐடி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான எம்.ஐ.டி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரம் பேர் அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் ஸ்பெக்டரா கூட்டரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை இன்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வினைத் தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ”அடுத்த முறை அதிமுக ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு வீடு, காய்கறி தோட்டம் திட்டம் அமல்படுத்தப்படும்,
ஆட்சி மாற்றத்தினால் வீட்டுக்கு வீடு காய்கறி தோட்டம் திட்டத்தை என்னால் செயல்படுத்த முடியாமல் போனது. தமிழகத்தில் விவசாயத்தை மேம்படுத்த நீரேற்று திட்டங்கள் அவசியம், அமெரிக்காவில் பசுக்கள் நாளொன்றுக்கு 60 முதல் 70 லிட்டர் பால் தருகிறது. அதேபோன்று தமிழகத்திலும் பால் உற்பத்தியை பெருக்க, சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆயிரம் ஏக்கரில் ஆயிரம் கோடி செலவில் கால்நடை பூங்கா மற்றும் ஆராய்ச்சி பண்ணை அமைக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த கால்நடை பண்ணை  கடந்த இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல்  உள்ளது. அதனை திறக்க வேண்டும்.”

“அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போதைய திமுக ஆட்சியில், எப்பொழுது மின்சாரம் வரும் எப்பொழுது போகும் என்ற நிலை உள்ளது. நள்ளிரவில் மின்சாரம் அடிக்கடி தடை போடுவதால் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். விவசாய கடன்களை இரண்டு முறை தள்ளுபடி செய்தது அதிமுக அரசுதான். ஒருமுறை 1200  கோடி ரூபாய் என்று இரண்டு முறை தள்ளுபடி செய்தது அதிமுக அரசுதான். தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது, கல்லூரி மாணவ மாணவிகள் இளமை பருவத்தில் போதை பொருள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.  எதிர்காலத்தில் நாட்டை ஆள பிறந்தவர்கள் நீங்கள், எனவே அதற்கேற்றவாறு உங்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும். வெற்றி பெறுவதற்கு உழைப்பு முக்கிய அவசியமாகும், கல்வி என்பது அத்தியாவசியங்களில் ஒன்றாகும், இளம் வயதில் கல்வியினை குறிக்கோளாக கருதி மாற்று பாதைக்கு செல்லாமல் கற்க வேண்டும்” என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என்.ஆர். சிவபதி, மாவட்ட செயலாளர்கள் மு. பரஞ்ஜோதி, ப. குமார், ஜெ. சீனிவாசன், இளம்பை தமிழ்செல்வன், கழக அமைப்பு செயலாளர்கள் எஸ். வளர்மதி, டி. ரத்தினவேல், ஆர். மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் கரூர் சின்னசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ப. அண்ணாவி, டிபி பூனாட்சி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டி. இந்திராகாந்தி, எம். செல்வராஜ், மல்லிகா சின்னசாமி, ஆர். சந்திரசேகர், சி. சின்னசாமி, மு. பரமேஸ்வரி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் எம்.அருணகிரி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் கல்லடிப்பட்டி எம். கோவிந்தராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் செயலாளர் மாவட்ட அணி செயலாளர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User