சென்னையில் இளைஞர் ஆணவக் கொலை... காரணமென்ன? - விசாரணையில் திடுக்கிடும் தகவல்...

Feb 25, 2024 - 10:14
0 374
சென்னையில் இளைஞர் ஆணவக் கொலை... காரணமென்ன? - விசாரணையில் திடுக்கிடும் தகவல்...

சென்னையில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர், ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நள்ளிரவில் திட்டம் தீட்டி படுகொலை செய்த, பெண்ணின் அண்ணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் பிரவீன். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரான இவர் கூலித் தொழிலாளியாக இருந்து வந்தார். இவர், ஜல்லடம்பேட்டை பகுதியில் வசித்து வந்த, வேற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த நிலையில், பெண் வீட்டார் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாக தெரிகிறது. இதனால், பெண் வீட்டாரின் பேச்சை மீறி, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, இருவரும் திருமணம் செய்துக் கொண்டு பள்ளிக்கரணையில் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில், பள்ளிக்கரணையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்த வந்த பிரவீனை, மறைந்திருந்த ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பிச் சென்றது. தகவலறிந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரவீனை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பெற்றோர் பேச்சை மீறி திருமணம் செய்துக் கொண்டதால், ஆத்திரத்தில் பெண்ணின் அண்ணன் தினேஷ் திட்டம் போட்டு பிரவீனை படுகொலை செய்ததது தெரியவந்தது. இதற்காக, பல நாட்கள் அவர் திட்டம் தீட்டியதும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள தினேஷ் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாகரிகம் வளர்ந்துள்ள சென்னை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற ஆணவ படுகொலைகள் தலைத் தூக்கியிருப்பது, சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும், கவலையும் ஏற்படுத்தியிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User