சட்டவிரோத பட்டாசு ஆலைகள்... எத்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன?.. டி.எஸ்.பிக்கு உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் சம்பந்தமாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

Apr 18, 2024 - 06:32
0 169
சட்டவிரோத பட்டாசு ஆலைகள்... எத்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன?.. டி.எஸ்.பிக்கு உத்தரவு

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் கடந்த பிப்ரவரி மாதம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அனுமதியின்றி பட்டாசு ஆலை நடத்தியதாக ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து முன்ஜாமீன் கோரி விக்னேஷ் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். 

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது,  அனுமதியின்றி பட்டாசுகளை எப்படி தயாரிக்க முடிகிறது? என்பது குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் அளிக்கும்படி நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டிருந்தார். ஆனால், அவரது தரப்பில் இதுவரை எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. 

இந்த நிலையில் வழக்கு கடந்த புதன்கிழமை மீண்டும் உயர்நீதிமன்ற மதுரையில் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு அதிகாரியாக டி.எஸ்.பி. பவித்ரா நியமிக்கப்பட்டுள்ளார் எனக் கூறினார். 

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன?. அந்த வழக்குகளின் விசாரணை நிலை என்ன?. சட்டவிரோதமாக செயல்படும் பட்டாசு ஆலைகளுக்கு எங்கிருந்து பட்டாசு தயாரிக்கும் பொருட்கள் கிடைக்கின்றன? என்பது குறித்து டிஎஸ்பி பவித்ரா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User