ஸ்டாலின் கை காட்டுபவர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் - லியோனி பேச்சு...

Apr 08, 2024 - 03:22
0 175
ஸ்டாலின் கை காட்டுபவர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் - லியோனி பேச்சு...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி கருத்து தெரிவித்துள்ளார். 

தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ராணியை ஆதரித்து ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே லியோனி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் "திமுக ஆட்சியில் பெண்கள் தான் மகிழ்ச்சியாக உள்ளனர். தென்காசி தொகுதியில் முதன்முதலாக பெண் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியில் ராணியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள், சொந்த சின்னத்தில் நிற்காமல், தங்களது கட்சியை அடகு வைத்து வேறொரு கட்சியின் சின்னத்தில் நிற்கிறது" என சாடினார். மேலும் "மகாலட்சுமி திட்டம் மூலம் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என இண்டியா கூட்டணி தெரிவித்துள்ளது. சாமி கும்பிடும் சூடத்திற்கும், குழந்தைகளுக்கான டயபர்களுக்கும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக ஒழிப்பதுதான் இண்டியா கூட்டணி" என கூறினார். 

தொடர்ந்து பேசிய லியோனி, "ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என்கிறார் பழனிச்சாமி.  எடப்பாடியின் கட்டைவிரல் ஜெயலலிதா,  நடு விரல் சசிகலா, அடுத்த விரல் ஓ.பன்னீர்செல்வம், கடைசி விரல் பாஜக, இப்போது எடப்பாடி பழனிச்சாமி ஒரு விரலுடன் உள்ளார். ஒரு விரலை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. உதயசூரியன் என்பது 5 விரல். இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரவு தெரிவித்தவர் பழனிசாமி. தேசியக் கொடியில் இருக்கும் காவி நிறம் இந்துக்கள், வெள்ளை நிற கிறிஸ்தவர்கள், பச்சை நிறம் இஸ்லாமியர்கள். அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதுதான் இந்தியா. தேர்தலுக்குப் பின் எடப்பாடி பழனிச்சாமி வவ்வால் போன்று தலைகீழாக தொங்குவார். ஸ்டாலின் கை காட்டுபவர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர்" இவ்வாறு அவர் பேசினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User