எகிறும் சைபர் க்ரைம் குற்றங்கள்.. ஒரு வருடத்தில் இத்தனை வழக்குகளா... காவல்துறை சொல்லும் அதிர்ச்சி தகவல்!

சென்னையில் இந்த ஆண்டு மட்டும் கொரியர் பார்சல் மோசடி போன்ற சைபர் கிரைம் மூலமாக 132.46 கோடி ரூபாய் பணத்தை பொதுமக்கள் இழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Sep 20, 2024 - 09:50
0 262
எகிறும் சைபர் க்ரைம் குற்றங்கள்.. ஒரு வருடத்தில் இத்தனை வழக்குகளா... காவல்துறை சொல்லும் அதிர்ச்சி தகவல்!

சென்னையில் இந்த ஆண்டு மட்டும் கொரியர் பார்சல் மோசடி போன்ற சைபர் கிரைம் மூலமாக 132.46 கோடி ரூபாய் பணத்தை பொதுமக்கள் இழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வயதானவர்கள், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள நபர்கள், பெண்களை குறிவைத்து அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து பெட்டெக்ஸ் (FEDEX) புளூடார்ட் (BLUEDART) கொரியர் நிறுவனங்களில் இருந்து பேசுவதுபோல் அழைப்புகள் வருகிறது. அந்த அழைப்பில் ஒருவருடைய பெயரை கூறிப்பிட்டு, ஒருவருடைய ஆதார் எண்ணை பயன்படுத்தி, இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு புலித்தோல், போதை பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள், சிம் கார்டுகள், போலி பாஸ்போர்ட்கள் மற்றம் சில கடத்தல் பொருட்கள் கொண்ட பார்சல் வந்திருப்பதாக கூறி பயத்தை கிளப்புகின்றனர் மோசடி மன்னன்கள். அல்லது TRAI எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து பேசுவதாகக் கூறி நம்முடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணை பயன்படுத்தி பல வங்கி கணக்குகளை தொடங்கி, அதன்மூலம் பல கோடி ரூபாய்க்கு ஹவாலா பணப்பறிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் கூறி, அதுசம்மந்தமாக மும்பை சைபர் கிரைம் போலீஸ், சிபிஐ குற்ற பிரிவு போலீசார் விசாரணை செய்ய வேண்டியதிருப்பதாகவும் கூறி போன் அழைப்பை மற்றொரு நபருக்கு பார்வேர்டு செய்வார்கள்.

பின்னர் எதிர்முனையில் காவல் துறையினரைப்போன்று பேசும் நபர், ஸ்கைப், வாட்ஸ்ஆப், சிக்னல் போன்ற சமூக வலைதள ஆப்பை பதிவிறக்கம் செய்ய சொல்லி அதன்மூலம் வீடியோ காலில் போலீஸ் போல இருந்து, ஆதார் எண்ணை பயன்படுத்தி பலகோடி ரூபாய்க்கு பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாகவும், மேலும் பல வங்கிகளில் கணக்கு துவக்கி முறையற்ற பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாகவும் தெரிவிப்பர், பின்னர், உங்களுடைய சேமிப்புத் தொகை, நிலையான வைப்பு தொகை (பிக்சட் டிபாசிட்) போன்றவற்றை ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருப்பதாக கூறி, அவர்கள் கொடுக்கும் ஆர்.பி.ஐ வங்கி கணக்கிற்கு அந்த பணத்தை  உடனடியாக அனுப்பும்படியும் கூறுவார்கள்.

மேலும் நாம் நம்புவதற்காக ஏற்கனவே போலியாக தயார் செய்த பத்திரிக்கை செய்திகள், உச்ச நீதிமன்ற கைது உத்தரவுகள், போலியான வலைதளங்கள், ஐடி கார்டுகளை அனுப்பி வைப்பார்கள். அதை உண்மை என்று நம்பி பலர் தங்களுடைய வங்கி கணக்குகளில் உள்ள சேமிப்பு பணம் மற்றும் வைப்புத் தொகை பணத்தை மோசடி நபர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்து ஏமாற்றப் படுகின்றார்கள். பணத்தை பெற்ற உடன் சந்தேக நபர்கள் அனுப்பிய அனைத்து மெசேஜூகள் மற்றும் தடயங்களை செயலிகளில் இருந்து அழித்து விடுகின்றனர்.

மேலும் இத்தகைய குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்களை போலிஸ் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக அடையாளம் தெரியாத நபர்களின் பெயரில் வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்களை பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்றி வருவதும், இத்தகைய குற்ற செயல்களில் குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருந்துக்கொண்டு பொது மக்களை ஏமாற்றி வருவதும் தெரியவருகின்றது.

இத்தகைய குற்றங்கள் தொடர்பாக சென்னை சைபர் கிரைம் நிலையத்தில் இந்த வருடத்தில் மட்டும் 132.46 கோடி ரூபாய் பணத்தை  சந்தேக நபர்களிடம் இழந்தது தொடர்பாக 190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக சென்னை  காவல் ஆணையாளர் அருண் தெரிவித்ததாவது, ”பொது மக்களுக்கு எந்தவொரு மாநில காவல் துறையோ, CBI போன்ற புலனாய்வு அமைப்புகளோ இதுபோன்று ஸ்கைப், வாட்ஸ்ஆப், சிக்னல் போன்ற செயலிகள் மூலம் அழைத்து விசாரணை செய்வதில்லை. சந்தேக நபர்களிடமிருந்து அழைப்புகள் வந்தால் அந்த எண்களை உடனடியாக நிராகரித்து விடுங்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், “பொது மக்கள் அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து தொடர்பு கொள்ளும் நபர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். முன்பின் தெரியாத நபர்களிடம் நம்முடைய வங்கி தொடர்பான தகவல்கள், OTP எண்களை தெரிவித்து அடையாளம் தெரியாத வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி ஏமாற்றம் அடைய வேண்டாம்”, என கூறியுள்ளார்.

பொது மக்களுக்கு உதவி செய்வதற்காக சென்னை பெருநகர காவல் துறையில் நான்கு இணை ஆணையாளர் அலுவலகங்கள் அமைந்துள்ள செயின்ட் தாமஸ் மவுண்ட், சேத்துபட்டு காவல் நிலையம், அண்ணாநகர் காவல் நிலையம், தண்டையார்பேட்டை காவல் நிலையம், மற்றும் 12 காவல் துணை ஆணையாளர் செயல்பட்டு வரும் சைபர் கிரைம் காவல் நிலையம் மற்றும் சைபர் கிரைம் குழுக்கள் ஆகியவற்றை அணுகி நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும் சைபர் குற்றங்கள் மூலம் பணம் இழப்பு ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் வலைதள முகவரி https://cybercrime.gov.in-ல் புகார் தெரிவிக்கும்படி கூறியுள்ளார். இதுபோன்ற நிகழ்வுகளில் உடனடியாக ஏதும் உதவி தேவையிருந்தால் அருகிலிருக்கும் காவல் நிலையத்தையோ அல்லது அவசர உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User