துபாயிலிருந்து தமிழகத்திற்கு ரூ.200 கோடி ஹவாலா பணம் கடத்த முயற்சி.. விசாரணையில் இறங்கிய ED

தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா செய்ய துபாயிலிருந்து தமிழ்நாட்டுக்கு ரூ.200 கோடியை கடத்தி வர முயன்றதாக ஹவாலா பணம் பரிமாற்றம் செய்யும் புரோக்கரை வருமான வரித்துறையினர் கைது செய்து அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். 

Apr 10, 2024 - 07:38
0 528
துபாயிலிருந்து தமிழகத்திற்கு ரூ.200 கோடி ஹவாலா பணம் கடத்த முயற்சி.. விசாரணையில் இறங்கிய ED

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு அரசியல் கட்சிகளும் பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அதனை தடுக்கும் பொருட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் ஹவாலா பணப் பரிமாற்றம் நடைபெற இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடந்த 7ஆம் தேதி மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த வினோத் குமார் ஜோசப் என்வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்ட வினோத்குமார் துபாய் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்த சட்ட விரோதமாக பணத்தை இந்தியாவிற்கு கொண்டுவர தரகராக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. 

மேலும் செல்போன், ஐ-பேட், லேப்டாப் உள்ளிட்டவற்றை கைப்பற்றிய வருமான வரித்துறை அதிகாரிகள் வினோத்குமாரின் வாட்ஸ் ஆப் சாட்களை ஆய்வுகளையும் ஆய்வு செய்துள்ளனர். அப்போது துபாயிலிருந்து சென்னைக்கு ஹவாலா முறையில் பணத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 

ஹவாலா தரகரான வினோத், துபாயைச் சேர்ந்த செல்வம் என்பவரிடம் பேசி வந்ததும், இவர்கள் 200 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை துபாயிலிருந்து மக்களவைத் தேர்தலுக்காக தமிழகம் கொண்டுவருதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும் அப்பு என்கிற விநாயகர் வேலன் வினோத்தின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து ஹவாலா மூலம் கொண்டுவரப்படும் பணத்தை பிரதான கட்சிக்கு சப்ளை செய்ய இருந்ததாகவும் வருமானவரித் துறையினர் சந்தேகிக்கின்றனர்.  இந்த விவகாரத்தில் துபாயைச் சேர்ந்த பெண் மற்றும் மலேசியாவை சேர்ந்த நபர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஹவாலா பரிமாற்றம் தொடர்பான வழக்கு என்பதால் தங்களிடம் பிடிபட்ட வினோத்தை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து  எந்த கட்சிக்கு பணம் பட்டுவாடா செய்ய 200 கோடி ரூபாய் கொண்டு வர திட்டமிட்டனர் என்ற கோணத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User