இனி வாரம் இருமுறை பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்: டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு 

தமிழ்நாடு காவல்துறையில் அதிகாரிகளால் நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் வாரத்திற்கு இருமுறை பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தும்படி டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். 

Jun 23, 2026 - 16:05
0 264
இனி வாரம் இருமுறை பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்: டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு 
டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு 

தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் தினமும் பண மோசடி, நிதி ஏமாற்று, அதிக வட்டி வசூல் தொடர்பான புகார்கள், காயம் ஏற்படுத்துதல், உயிருக்கு அச்சுறுத்தல், சிறிய தகராறுகள், குடும்பப் பிரச்சினைகள், விபத்துகள். இணைய மற்றும் ஆன்லைன் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்த புகார்கள் பெறப்பட்டு வருகின்றது.

பொதுமக்களின் குறைகளை திறம்பட தீர்ப்பதற்கும். காவல்துறையை பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கும். மாநிலம் முழுவதும் ஒவ்வொரு புதன்கிழமையும் சனிக்கிழமையும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை "பொதுமக்கள் குறைதீர் நாள்" ஆகக் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. 

அந்நாட்களில், நகர காவல் ஆணையர்கள், மண்டல காவல் துறைத் தலைவர். சரக காவல் துணைத் தலைவர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள். நகர துணை காவல் ஆணையர்கள், உதவி காவல் ஆணையர்கள், மாவட்ட உட்கோட்ட அலுவலர்கள் மற்றும் காவல் நிலைய நிலைய அலுவலர்கள் ஆகியோர் தங்களது அலுவலகங்களில் நேரடியாக பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று. அவர்களுடன் கலந்துரையாடி குறைகளைத் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. 

பொதுமக்கள் குறைதீர் நாளில் பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, தேவையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும். பெறப்படும் ஒவ்வொரு மனுவிற்கும் ஒப்புகைச் சீட்டு (Acknowledgement) வழங்கப்பட வேண்டும். மேலும், மனுக்களுக்கு சட்டப்படி விரைவான நடவடிக்கை எடுத்து, இயன்றவரை 15 நாட்களுக்குள் தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்று டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். 

பொதுமக்கள் மரியாதையுடன் நடத்தப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு உடனடியாக இருக்கைகள் வழங்கப்பட வேண்டும். மனுக்கள் அன்புடனும் மரியாதையுடனும் பெறப்பட வேண்டும். மேலும், போதுமான இருக்கை வசதி மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 

ஏதேனும் காரணங்களால் (அலுவல் பணிகள் அல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலைகள்) அலகுத் தலைவர் அல்லது மேற்பார்வை அதிகாரி குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க முடியாத பட்சத்தில், அடுத்த நிலை மூத்த அதிகாரி அவசியம் பங்கேற்று, மனுக்களைப் பெற்று. பொதுமக்களுடன் கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அனைத்து அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணித்து, அவற்றை காலதாமதமின்றி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதன் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதில் தமிழ்நாடு காவல்துறையின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User