வேகமெடுக்கும் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்... நயினார் நாகேந்திரனுக்கு எதிராக துருப்புச்சீட்டு.. கிடுக்கிப்பிடி விசாரணை

தாம்பரம் ரயில் நிலையத்தில்  ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகனிடம் வேலை செய்யும் ஜெய்சங்கரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். 

May 04, 2024 - 15:08
0 270
வேகமெடுக்கும் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்... நயினார் நாகேந்திரனுக்கு எதிராக துருப்புச்சீட்டு.. கிடுக்கிப்பிடி விசாரணை

தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் விநியோகிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம், நகை, பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி நெல்லை செல்லும் ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்  தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்தனர். 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை அதிரடியாக பறிமுதல் செய்த அதிகாரிகள், சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும் பணம் பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதனால் இந்த வழக்கை தாம்பரம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். 

இதையடுத்து ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றும்படி தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பரிந்துரை செய்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை தாம்பரம் போலீசார் சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகனிடம் வேலை செய்யும் ஜெய்சங்கர் என்பவர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார். பணத்தை கொண்டு செல்ல உதவி புரிந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே இந்த வழக்கில் 5 பேரை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று (மே 4) ஜெய்சங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் பெறப்படும் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய சிபிசிஐடி முடிவு செய்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User