கஞ்சா வழக்கில் கைதான சவுக்கு சங்கர் கையில் கட்டு.. பரபர FIR.. 15 நாட்களுக்கு கோர்ட் கஸ்டடி

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல யூட்டியுபர் சவுக்கு சங்கரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

May 08, 2024 - 16:48
0 627
கஞ்சா வழக்கில் கைதான சவுக்கு சங்கர் கையில் கட்டு.. பரபர  FIR.. 15 நாட்களுக்கு கோர்ட் கஸ்டடி

சவுக்கு மீடியா முதன்மை செயல் அதிகாரியான  சவுக்குசங்கர் கடந்த 03.04.2024 இரவு தேனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தார். அவருடன் அவரது ஓட்டுநர் ராம்பிரபு ,22 மற்றும் ராஜரத்தினம், 43ஆகியோரும் தங்கி இருந்தனர். இந்த நிலையில் 04.05.2024 அதிகாலை 1:30 மணிக்கு கோவையிலிருந்து வந்த போலீஸ் அதிகாரிகள் அதிகாலை 3 மணியளவில் சவுக்குசங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து அவருடன் தங்கி இருந்த ராஜரத்தினம் மற்றும் ராம்பிரபு ஆகிய இருவரையும் பழனிசெட்டிபட்டி காவல்நிலைய போலீசார் கைது செய்து பழனிச் செட்டிபட்டி காவல் நிலையம் கொண்டு சென்று அவர்களிடம் சுமார் 18 மணி நேர விசாரணைக்குப் பின் நள்ளிரவு 11.30 மணிக்கு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், தொடர்ந்து., சவுக்கு சங்கர் அவரது ஓட்டுநர் ராம்பிரபு மற்றும் ராஜரத்தினம் உள்ளிட்ட 3பேரை கைது செய்ய சென்ற பெண் போலீசாரை தாக்க முயன்றதாகவும், அவதூறாக பேசியதாகவும், அவர்கள் வந்த காரில் தலா 100 கிராம் வீதம் நான்கு பாக்கெட்டுகளில் மொத்தம் 400 கிராம் கஞ்சா வைத்திருந்ததாகவும், 294 (4) 359, பெண்கள் வன்கொடுமை சட்டம் 4, போதைப்பொருள் பயன்பாடு தடைச் சட்டம் 8 (C) 20 B ii (A), 29 (1), 25 ஆகிய ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

மேலும், அவர்கள் வந்த இனோவா கிரிஸ்டா கார், ரொக்க பணம் ரூ.70,000, 3-கேமராக்கள், லேப்டாப்புகள், மணி பர்ஸ், ஏடிஎம் கார்டுகள், ஆதார் கார்டு, பான்கார்டு, மொபைல் போன்கள், ஓட்டுனர் உரிமங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சவுக்குசங்கர் கோயமுத்தூர் போலீசாரால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 15-நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில், ராம்பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகிய இருவரும் நள்ளிரவு 11:30 மணிக்கு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் உட்பட மூன்று பேர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே இரண்டு பேர் பெரியகுளம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதே வழக்கில் நான்காவது குற்றவாளியாக (A4) கமுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், மகேந்திரன் என்பவர் சவுக்கு சங்கருக்கு கஞ்சா விற்பனை செய்ததாகவும், மகேந்திரனை பிடிக்க சென்ற போது அவரிடம் 2.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக இவ்வழக்கில் கூடுதல் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், மகேந்திரன் கொடுத்த தகவல்களின் பேரில் இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு கிலோ எடைக்கு குறைவான கஞ்சா வழக்குகளை விசாரிக்க மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில், தற்போது சவுக்குசங்கர் வழக்கில் 3 கிலோ பிடிபட்டிருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் இந்த வழக்கு தேனியில் இருந்து மதுரை போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுள்ளது. 

இதனையடுத்து இன்று மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை ஆஜர்படுத்தினர். சவுக்கு சங்கர் ஆஜராக உள்ளதைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகள் சிலர் தங்களது பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் மூதாட்டிகளை அழைத்து வந்து கையில் பதாகைகள் கொடுத்தும் சவுக்கு சங்கருக்கு எதிராக கோஷங்கள் எழுப்ப சொல்லியும் கையில் துடைப்பம் மற்றும் தக்காளியுடன் அழைத்து வந்ததாக போராட்டத்திற்கு வந்த பெண்கள் தவிர்த்தனர்.

இதனால் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமல செல்வன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். 

வழக்கை விசாரித்த நீதிபதி மே 22 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து சவுக்கு சங்கரிடம் விசாரணை செய்ய நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டுள்ளார். கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் வலது கையில் கட்டு போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User