நடிகர் எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி
நடிகர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் படப்பிடிப்பில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் வாலி, குஷி, நியூ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா. இசை திரைப்படத்திற்கு பிறகு 10 ஆண்டுகளை கழித்து எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் திரைப்படம் கில்லர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. 2 ஆம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள பின்னிமில்லிற்குள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் கில்லர் படப்பிடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் கில்லர் படப்பிடிப்பு நடைபெற்று வந்த போது அங்கிருந்த கேஸ் பலூன் சிலிண்டர் திடீரென வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கி தொழில்நுட்ப கலைஞராக பணியாற்றி வந்த மதுரவாயல் பகுதியை சேர்ந்த மதன் (26), குன்றத்தூரை சேர்ந்த சக்திவேல் (27), மதுரவாயல் பகுதியை சேர்ந்த சூர்யா(23), நெற்குன்றம் பகுதியை சேர்ந்த தினகரன் (24) ஆகிய மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
உடனே அருகில் இருந்த சக ஊழியர்கள் நான்கு பேரையும் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மதனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் காயமடைந்த சூர்யா, தினகரன், சக்திவேல் ஆகிய மூவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த படப்பிடிப்பு உள் அரங்கு சூட்டிங் என்பதால் காவல்துறையினரிடம் அனுமதி பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். படக்குழுவினரிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கில்லர் ஸ்டண்ட் காட்சியான பிளாஸ்ட் சீன் படமாக்கப்பட்டது. அப்போது, சிலிண்டர் மூலமாக பயர்பால் நிரப்பிய நிலையில், அப்போது திடீரென கேஸ் லீக்காகி பயர் பால் வெடித்து சிதறியுள்ளது. இதில் சிலிண்டர் அருகிலேயே இருந்ததால் மதன் உயிரிந்தது தெரிய வந்தது. 2 நாட்களாக இந்த சண்டை காட்சி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)