வருமானத்தை மறைத்ததாக முதல்வர் விஜய் மீதான வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

வருமானத்தை மறைத்ததாக, வருமான வரித் துறை நடத்திய விசாரணையின்  அடிப்படையில் முதல்வர் விஜய் மீது  வழக்குப்பதிவு செய்யக்  கோரிய  மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jun 02, 2026 - 06:53
0 279
வருமானத்தை மறைத்ததாக முதல்வர் விஜய் மீதான வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
முதல்வர் விஜய் மீதான வழக்கு தள்ளுபடி

முதல்வர் விஜய் வீட்டில், கடந்த 2015ஆம் ஆண்டு சோதனை நடத்திய வருமான வரித்துறை, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாததை கண்டறிந்து,  ஒரு கோடியே 50  லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து முதல்வர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யபட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில்,  வருமான வரித்துறை சோதனைகளின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், மதிப்பீட்டு நடவடிக்கைகள், ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்த உத்தரவு ஆகியவற்றை ஆய்வு செய்து, முதல்வர் விஜய்-க்கு எதிராக வருமான வரிச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும், வருமானத்தை மறைத்ததற்காக மோசடி, குற்றச் சதி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட   கோரியும் கொடுங்கையூரைச் சேர்ந்த எம்.ராஜ்குமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற  தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவதற்குத் தேவையான முகாந்திரம் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக,  ஆவணங்களை அமலாக்க இயக்குநரகத்துக்கு அனுப்ப உத்தரவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User