தலையங்கம்: கருவி - காலம் - செயல்..!

சர்வதேச விவகாரங்களில் தந்திரமான அமைதி காக்கும் அரசின் ராஜதந்திரத்தை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது தேசத்தைப் பலவீனப்படுத்தும். சரியான கருவி, காலம் அறிந்து செயல்படுவதே சிறந்த நிர்வாகத்திற்கு இலக்கணம் என்கிறது இத்தலையங்கம்.

Mar 10, 2026 - 11:08
0 631
தலையங்கம்: கருவி - காலம் - செயல்..!
தலையங்கம்

அறைக்குள் வைத்துப் பேசவேண்டிய விவகாரம் எது. சபையில் உரக்க குரல் கொடுக்க வேண்டியது எது என்ற பேதம் நன்றாகத் தெரிந்திருந்தும்... ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரசாரும் அவர்களின் தோழமைக் கட்சியினரும் அன்றாடம் ஒரு சர்ச்சையைக் கிளப்புகிறார்கள். அதற்கு பிரதமரும் ஆளுங்கட்சி அமைச்சர்களும் உடனே பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் கூக்குரல் எழுப்புகிறார்கள்.

கேள்விகள் கேட்பது அவர்கள் உரிமை என்பதிலோ, நாட்டு மக்களுக்கு முக்கியப் பிரச்னைகள் குறித்த அரசின் பார்வை தெரிந்தாக வேண்டும் என்பதிலோ மாற்றுக் கருத்து கிடையாது.

ஆனால், அண்மைக்காலமாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் சில விவகாரங்கள், சர்வதேச அரங்கில் இந்திய தேசத்தைப் பலவீனப்படுத்தும் விதமாகவே உள்ளன. போர் பயம் அற்ற, அமைதியான வளர்ச்சியை நோக்கித் திட்டமிடும் ஓர் அரசுக்கு... வம்படியாக மற்ற நாடுகளுடன் பகையை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கின்றன.
இதற்கான பல எடுத்துக்காட்டுக்களில் ஒன்று... 'இஸ்ரேல் அமெரிக்க கூட்டுத் தாக்குதலில் ஈரான் அதிபர் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்தே ஆக வேண்டும்' என்று எதிர்க்கட்சியினர் கையை முறுக்கிய விவகாரம்!

பல்லாயிரம் கோடிகளை விரயமாக்கி, யுத்தம் செய்வதன் மூலம் தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தையும் படுகுழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் முரட்டு தேசங்களின் எரிச்சல் பார்வையில் விழாமல் இப்படி ஒதுங்கி இருக்கும் செயலை ராஜதந்திரம் எனக் கருதுகிறது இந்திய அரசு. இந்தியாவையும் யுத்த நெருப்புக்குள் இழுத்துப் போடும் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுவதாக இந்திய அரசு கருதுகிறது. நடுநிலைமை சரியல்ல. தெளிவான நிலைப்பாடு வேண்டுமென எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. எது சரி?

ஒரு நல்ல அமைச்சு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு திருவள்ளுவர் தரும் விளக்கம் இது கருவியும் காலமும் செய்கையும் செய்யும்// அருவினையும் மாண்டது அமைச்சு// ஒரு செயலைச் செய்வதற்கு வேண்டிய கருவிகளையும், ஏற்ற காலத்தையும், செய்யும் வகையையும், செயலின் அருமையையும் ஒருசேர சிந்தித்துச் செயலாற்றுபவரே நல்ல அமைச்சர் என்று பொருள் இதற்கு! எல்லோருக்கும் இது புரியட்டும்! 

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 1
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User