தலையங்கம்: உறுதி கேளுங்கள்...!

அவையின் மாண்பைக் காக்க ஆக்கபூர்வ விவாதங்களில் ஈடுபடுவோம் என உறுதியளிக்கும் வேட்பாளர்களுக்கே வாக்களியுங்கள்.

Feb 10, 2026 - 12:20
0 454
தலையங்கம்: உறுதி கேளுங்கள்...!
தலையங்கம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சி உறுப்பினர்களை நோக்கி சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்த வார்த்தைகள் ஜனநாயகத்தில் கவலைக்குரியவை.

'அவையைத் தொடர்ந்து நடத்தவிடாமல் நீங்கள் திட்டமிட்டு முட்டுக்கட்டை போடுகிறீர்கள். இதுவரை 19 மணி நேரம் 13 நிமிடங்கள் அவை நேரம் வீணாகிவிட்டது. பதாதைகளோடு கோஷமிடுவதற்காக நீங்கள் இங்கே அனுப்பப்படவில்லை. இப்படியே நடந்தால், என்னால் அவையை நடத்த முடியாது' என ஒத்திவைத்தார், சபாநாயகர். தொடர்ந்து ஐந்து நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியது; இதே காட்சிதான் மாநிலச் சட்டமன்றங்களிலும்!

மக்களின் கோரிக்கைகளையும் மனக்குமுறலையும் அவையில் விவாதித்து, தீர்வு காணவேண்டியவர்களே மக்கள் பிரதிநிதிகள். ஆனால் கோஷமிடுவதும், அமர்வை முடக்குவதுமே அவர்களின் அரசியல் ஆயுதங்களாகிவிட்டன. அவையில் வீணாகும் ஒவ்வொரு நிமிடமும், ஒரு பிரச்னைக்கான தீர்வு தள்ளிப்போகிறது; மக்களின் நம்பிக்கை சிதைகிறது. 

140 கோடி மக்களின் வரிப்பணத்தில் நடைபெறும் அவை, சிலரின் அரசியல் நாடக மேடையாக மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்க்கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை உண்டு; அது ஜனநாயகத்தின் அடையாளம். அதற்காக அவையைச் செயலிழக்கச் செய்யக் கூடாது. அதேநேரத்தில், ஆளும்தரப்புக்கும் எதிர்க்குரல்களைப் பொறுமையாகக் கேட்டு, பதில் சொல்லும் பொறுப்பும் இருக்கிறது.

நாடாளுமன்றமும் சட்டமன்றமும் அதிகாரப் போட்டிக்கான அரங்குகள் அல்ல. மக்களின் குரல் ஒலிக்கவேண்டிய இடங்கள். அந்தக் குரல், விவாதங்களிலேயே வெளிப்பட வேண்டும். இல்லையெனில், 'அவையின் மாண்பு' என்ற சொல் நடைமுறையில் இருந்து மறைந்துவிடும்.

இதோ, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வெகுவிரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது. வேட்பாளர்கள், உங்கள் வீட்டின் வாசலுக்கு வரப்போகிறார்கள். அப்போது அவர்களிடம் ஓர் உறுதிமொழி கேளுங்கள். ‘மக்கள் பிரதிநிதிகளாக அவைக்குச் சென்ற பிறகு, அமளி துமளியால் அவையை முடக்கமாட்டோம்; ஆக்கபூர்வமான விவாதங்களில் ஈடுபட்டு, மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்போம்' என்ற உறுதியைக் கேட்டு வாங்குங்கள். அதற்கு நேர்மையாக ஒப்புக்கொள்பவர்களுக்கு மட்டுமே வாக்குகளை வழங்குங்கள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User