சித்திரை திருவிழா.. வைகை ஆற்றில் இறங்க மதுரைக்கு வரும் கள்ளழகர்... ஏப்.23ல் உள்ளூர் விடுமுறை

உலக புகழ் பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நாளான வரும் 23ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.

Apr 16, 2024 - 10:50
0 752
சித்திரை திருவிழா.. வைகை ஆற்றில் இறங்க மதுரைக்கு வரும் கள்ளழகர்... ஏப்.23ல் உள்ளூர் விடுமுறை

மதுரை மாநகரில் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது 12 நாட்கள் நடைபெறும் இச்சித்திரை திருவிழாவில் மதுரையே கொண்டாட்டமாக இருக்கும்.  இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. தினந்தோறும் சுவாமியும் மீனாட்சி அம்மனும் மாசி வீதிகளில் உலா வருவதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் 19ஆம் தேதி பட்டாபிஷேகமும், 20 தேதி திக்குவிஜயம், 21ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், 22 ஆம் தேதி திருதேரோட்டம் நிகழ்வும், 23ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற இருக்கின்றது. 

வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வரும் 21 ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி புறப்படுகிறார். ஏப்ரல் 22 ஆம் தேதி காலை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெறுகிறது.  ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை 5.51 மணியிலிருந்து 6.10 மணிக்குள் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வு நடைபெறுகிறது .

ஏப்ரல் 24 ஆம் தேதி கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்வு நடைபெறுகிறது.  ஏப்ரல் 26 ஆம் தேதி அதிகாலை பூ பல்லக்கில் எழுந்தருளும் கள்ளழகர், அழகர் மலையை நோக்கி புறப்படுகிறார். ஏப்ரல் 27 ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலைக்கு திரும்புகிறார்.

23ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தை முன்னிட்டு அன்றைய தினம் மட்டும் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். 

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23-ஆம் தேதி காலை 5.51 மணியிலிருந்து 6.10 மணிக்குள் நடைபெறும். இதில் மதுரையின் பல்வேறு கிராமப்புறங்களிலிருந்து மட்டுமன்றி தென்மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் ஆழ்வார்புரம், ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் அருகே வைகையாற்றில் எழுந்தருள்வார் என்பதால், அவ்விடத்தை மதுரை மாநகராட்சி  சுத்தம் செய்து வருகிறது. கள்ளழகர் இறங்கக்கூடிய தண்ணீர்த் தொட்டியும் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.

செம்மண், சரளைக்கற்கள் கொட்டப்பட்டு ஜேசிபி மூலமாக அவ்விடம் சமதளமாக்கப்பட்டு வருகிறது. தற்போது வைகையாற்றில் தண்ணீர் குறைவாக உள்ள காரணத்தால், இதற்காக வருகின்ற இன்னும் சில நாட்களில் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தினமான வரும் 23ம் தேதி மதுரையில் போக்குவரத்து முற்றிலும் வேறு பாதைகளில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User