சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து -சிபிஐ விசாரணை கோரிய வழக்கு முடித்து வைப்பு

முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

Jan 09, 2024 - 23:36
0 215
சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து -சிபிஐ விசாரணை கோரிய வழக்கு முடித்து வைப்பு

சென்னை மவுலிவாக்கத்தில் நடந்த கட்டிட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக பொருளாளராக இருந்தபோது தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கம் என்னுமிடத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம், கடந்த 2014 ம் ஆண்டு ஜூன் மாதம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 61 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். அருகில் இருந்த மற்றொரு 11 மாடி கட்டிடம், 2014 நவம்பர் மாதம் அரசால் இடிக்கப்பட்டது. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்போது முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். அத்துடன், நீதிபதி ரகுபதி தலைமையில் ஒருநபர் ஆணையத்தையும் அமைத்து உத்தரவிட்டிருந்தார்.

சிறப்பு புலனாய்வு குழு விசாரணை திருப்தியளிக்கும் வகையில் இல்லை எனக் கூறி, இந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அப்போது திமுக பொருளாளராக இருந்த, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது முதல்வர் ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, கட்டிட விபத்து சம்பவம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், தற்போது இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க காரணமும் இல்லை என்பதால், வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.இதைபதிவு செய்து கொண்ட நீதிபதிகள், முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User