அதிமுக ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி பாடத்தை நீக்குவோம்.. ஜெயக்குமார் அதிரடி

May 01, 2024 - 16:33
0 347
அதிமுக ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி  பாடத்தை நீக்குவோம்.. ஜெயக்குமார் அதிரடி

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 10-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கருணாநிதி குறித்து இடம்பெற்றுள்ள பாடத்தை நீக்கும்வோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

கோடை காலத்தில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் சென்னை திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கினார். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், மே தினம் தொழிலாளர் வர்க்கத்தினரின் தியாகத்தால் உருவானது எனவும் தொழிலாளர்கள் நலனைக் காத்தவர் எம்ஜிஆர் எனவும் பெருமிதம் தெரிவித்தார். திமுக அரசு தொழிலாளர்களின் மீது விரோத போக்கை கடைபிடித்துக் கொண்டு வருவதாகவும் திமுக ஆட்சியில் தொழிலாளர்கள் பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் அவர் குற்றம்சாட்டினார். 

நடிகர் அஜித்குமாருக்கு பிறந்தநாள்  தெரிவித்த ஜெயக்குமார், நடிகர்களில் தைரியமாக செயல்படக்கூடியவர் அஜித்குமார் என புகழாரம் சூட்டினார். கருணாநிதியின் பாராட்டு விழா மேடையிலேயே திமுகவிற்கு எதிராக பேசிய அஜித் உண்மையிலேயே தைரியசாலி எனவும் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே தங்களது விருப்பம் எனவும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர்,  தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை, ஆனால் 24 மணி நேரமும் மதுபானம் கிடைப்பதாக குற்றம்சாட்டினார். நாட்டில் பல பிரச்னைகள் தலை விரித்தாடும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருப்பதாகவும் விமர்சனம் செய்தார்.

அப்போது பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் கருணாநிதியின் வரலாறு இடம்பெற்றுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், அதிமுக ஆட்சியில் பாட புத்தகத்திலிருந்து கருணாநிதி குறித்த பாடம் நீக்கப்படும் என திட்டவட்டமாக கூறினார். மேலும், பள்ளி பாட புத்தகங்களில் வீரம், வரலாற்று சாதனை பற்றிய பாடங்களை மட்டுமே வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நீலகிரி மக்களவைத் தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா செயல்படாமல் போனது குறித்த கேள்விக்கு, என் வீட்டிலும் 26 கேமராக்கள் உள்ளன. என் வீட்டிலும் வெயில் அடிக்கிறது, ஆனால் அவை இதுவரை பழுதானதில்லை எனக் கூறினார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும் நியாயமாகவும் செயல்பட வேண்டும் எனவும் ஒருதலை பட்சமாக இருக்கக் கூடாது எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User