மாற்று சமூக பெண்ணுடன் காதல்... "என்னோட ஆசை இதுதான்" உருக்கமான கடைசி பதிவு....

Apr 05, 2024 - 22:04
0 564
மாற்று சமூக பெண்ணுடன் காதல்... "என்னோட ஆசை இதுதான்" உருக்கமான கடைசி பதிவு....

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் உறவினர்கள் தாக்கியதால் மன உளைச்சலில் இளைஞர் ஒருவர் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். விஷம் அருந்துவதற்கு முன் தனது கடைசி ஆசை இதுதான் எனக் கூறி வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்..

திருப்பத்தூர் மாவட்டம்  ஆம்பூர் அருகே உள்ள காமனூர் தட்டு மலைகிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த். 23 வயதான இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்த நிலையில் அரவிந்தும் அதே கிராமத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொல்லப்படும் நிலையில், இதற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. 

இதுதொடர்பாக அரவிந்த்  கடந்த மார்ச் 19-ம் ஆம்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்த  நிலையில், காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

காதலியின் பிரிவை தாங்க முடியாத அரவிந்த், அப்பெண்ணின் வீட்டிற்கு செல்ல அங்கிருந்த உறவினர்கள் அவரை கொடூரமாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அரவிந்த், உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்து கடந்த மார்ச் 23-ம் தேதியன்று விஷம் அருந்தி அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். 

அரவிந்த் வெளியிட்ட வீடியோவை பார்த்து அதிர்ந்த உறவினர்கள் அவரை மீட்டு ஆம்பூர் மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதித்தனர். தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அரவிந்த் இன்று (ஏப்ரல் 5) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

சாதியை தூக்கி பிடித்து ஒருபுறம் ஆணவக் கொலைகள் போன்ற கொடூரங்கள் அரங்கேற, மற்றொரு புறம் பிள்ளைகள் இதுபோன்ற விபரீத முடிவை எடுப்பது அவர்களது பெற்றோர் மீது இடி விழுந்ததைப்போல் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது... வாழ்க்கையில் என்ன நிலை வந்தாலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு வராமல், எதிர்த்து போராடும் தன்னம்பிக்கையுடன் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 1
Angry Angry 0

Comments (0)

User