”சட்டமன்றத்த சினிமா தியேட்டரா மாத்திட்டாங்க.....” - உதயநிதி சாடல்..!

விசில் அடிப்பது, டைலாக் பேசுவது போக விரைவில் சட்டமன்றம் அமைச்சர் பாடலுக்கு நடனமாடும் நிலையும் வரலாம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். 

Jun 23, 2026 - 07:26
0 255
”சட்டமன்றத்த சினிமா தியேட்டரா மாத்திட்டாங்க.....” - உதயநிதி சாடல்..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரையில், திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டதுடன், பின்னர் வெளிநடப்பும் செய்தனர். 

இந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு விரிவாக விளக்கம் அளித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவை நடைமுறைகள் மற்றும் மரபுகள் மீறப்பட்டதாக குற்றம்சாட்டினார். "சட்டப்பேரவை தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை மரபை மீறி தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து ஏன் இருமுறை பாடப்படவில்லை என்று அவையிலேயே கேள்வி எழுப்பினேன். ஆனால் அதற்கு எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை" என்றார்.

மேலும், மாணவர்களுக்கான 'நான் முதல்வன்' திட்டம் தொடர்பாகவும் கேள்வி எழுப்பியதாக அவர் தெரிவித்தார். "நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 41 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அந்த திட்டம் நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து கேட்ட கேள்விகளுக்கும் தெளிவான பதில் வழங்கப்படவில்லை" என்று  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

தொடர்ந்து, மின்வெட்டு பிரச்சினை குறித்தும் அரசை விமர்சித்த உதயநிதி, மின்வெட்டு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல், அதற்கான பழியை திமுக மீது சுமத்த முயற்சி செய்துள்ளனர் என்றும், விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி கோரிக்கை தொடர்பாக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை திமுக தூண்டிவிட்டதாக முதலமைச்சர் கூறியிருப்பது விவசாயிகளை அவமதிக்கும் செயல் என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, "திமுக ஆட்சியில் டிஜிபி நியமிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் ஒரே நாளில் அனைத்தையும் மாற்றிவிடுவோம் என்று கூறித்தான் ஆட்சிக்கு வந்தார்கள். ஆட்சி அமைந்து 40 நாட்கள் ஆகியும், மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒரே நாளில் 24 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆளுங்கட்சியினரே பல குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளனர். அதற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன" என்றார்.

மேலும், "யாருடைய ஆதரவுமின்றி ஆட்சி நடத்துகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் ஆட்சி அமைந்த உடனேயே அதிமுகவின் ஒரு தரப்பினரை ஏன் சந்திக்கச் சென்றார்கள்? முதலில் சோஃபா சென்றது, பின்னர் முதலமைச்சர் சென்றார். ஒவ்வொரு அரசியல் சந்திப்புக்கும் புதிய சோஃபாக்கள் அனுப்பப்பட்டன" என்று கிண்டலாக உதயநிதி விமர்சித்தார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்த விவகாரத்தையும் குறிப்பிட்ட அவர், "அமைச்சர் அலுவலகத்திலேயே அதிமுக உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைகிறார்கள். இன்று முதலமைச்சர் ஆற்றிய உரை, ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் வசனம் பேசிவிட்டு செல்வது போல இருந்தது" என்றதோடு, "சட்டப்பேரவை உரை என்பது அரசின் கொள்கைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து பேச வேண்டிய இடம். ஆனால் முதலமைச்சர் இசை வெளியீட்டு விழா அல்லது திரைப்பட டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசுவது போன்ற பாணியையே பின்பற்றுகிறார்” என்று குறிப்பிட்டார்.

கடைசியாக, “சட்டப்பேரவையை சினிமா தியேட்டராக மாற்றிவிட்டனர். இன்று விசில் அடிக்கிறார்கள்; இன்னும் சில நாட்களில் அமைச்சர்கள் பாடலுக்கு நடனமாடும் நிலையும் வரலாம்" என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடுமையாக விமர்சித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User