மா.செக்களாகும் தாவல் தலைகள்...? தலையை பீய்த்துக் கொள்ளும் தலைவனின் தங்கங்கள்..!

தவெகவில் மா.செக்களாக இருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு, தாவல் தலைகளுக்கு அதிகாரம் கிடைக்கப்போவதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Jun 11, 2026 - 07:40
0 306
மா.செக்களாகும் தாவல் தலைகள்...? தலையை பீய்த்துக் கொள்ளும் தலைவனின் தங்கங்கள்..!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றபோதும், தனிபெரும் கட்சியாக ஆட்சி அமைக்க முடியாத சூழலில், கம்யூனிஸ்ட்டுக்கள், காங்கிரஸ்,, விசிக ஆகிய கட்சிகள் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக  விஜய் பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், தவெக ஆட்சி, அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவர்மீதும் அடுத்தடுத்து விமர்சன்ங்கள் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, பெண்கள் பாதுகாப்பை மையமாக வைத்து பிரசாரம் செய்து ஆட்சியை பிடித்தும், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் போது வாயை திறக்காமல் மௌனம் காக்கிறது தவெக அரசு என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல, அனுபவம் இல்லாத அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் பேச்சு, நடவடிக்கைகள் தவெக அரசுக்கு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில், தவெக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் இன்று(ஜூன் 11) மாலை நடைபெற உள்ளது.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்களுக்கு ஷாக் கொடுக்கப்போகும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தமிழக வெற்றிக் கழகம் தொடங்குவதற்கு முன்னர் இருந்தே பல ஆண்டுகளாக விஜய் ரசிகர் மன்றம், அதன்பிறகு மக்கள் இயக்கம் என காலம் காலமாக விஜய்காக உழைத்தவர்களுக்கே மாவட்டச் செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்தகையச் சூழலில், விஜய்க்காகவே உழைத்து, விஜய்காகவே தங்கள் பணத்தை செலவு செய்து, விஜய்க்காக பல அவமான்ங்களை சந்தித்த உண்மையான மாவட்டச் செயலாளர்களுக்கு கல்தா கொடுக்க தவெக தலைமை முடிவெடுத்துள்ளதாம். 

மாறாக, தாவல் தலைகளான பிற கட்சியில் இருந்து கொத்து கொத்தாக ஆட்களை கூட்டிவந்த முக்கியஸ்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும், அவர்களுக்கே மாவட்ட அளவில் பெரும் அதிகாரங்களும் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுகுறித்து விசாரித்தால், நம்மை தேடி வந்தவர்கள் நாம் தானே அரவணைக்க வேண்டும் என்று கூறுகிறதாம் தலைமை. இதனால், விஜய்க்காக ஓடை தேய்ந்த மாவட்டச் செயலாளர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.  

 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User