PETA இந்தியாவின் நாய் பால் விளம்பரம்: இணையத்தில் வெடித்த சர்ச்சை!

விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பான பீட்டா இந்தியா சார்பில் நகரின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டுள்ள நாய்பால் விளம்பர பேனர் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அசைவம் சாப்பிடுபவர்கள் மற்றும் விலங்குகளின் பால் குடிப்பவர்களை விமர்சிக்கும் வகையில் இந்த விளம்பர பேனரில் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

Jun 16, 2025 - 06:35
0 860
PETA இந்தியாவின் நாய் பால் விளம்பரம்: இணையத்தில் வெடித்த சர்ச்சை!
peta india ad promoting veganism

உலகம் முழுவதும் பால் தினம் ஜூன் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலக பால் தினத்தை முன்னிட்டு விலங்குகள் நல அமைப்பான PETA இந்தியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட ஒரு போஸ்டர் கடும் விமர்சனங்களை சந்தித்தது. தற்போது, அந்த போஸ்டரை ஊர் முழுக்க ஓட்டி மீண்டும் தேவையற்ற சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

அந்த விளம்பர பேனரில், அசைவ உணவு சாப்பிடும் நபர்களை மோசமாக விமர்சித்துள்ளது PETA இந்தியா அமைப்பு. அந்த விளம்பரத்தில் பெண் ஒருவர் நாய் பாலை அருந்துவது போல் போஸ் கொடுத்துள்ளார். அதன் அருகில், "நீங்கள் நாய் பாலை குடிக்க மாட்டீர்கள் என்றால், வேறு எந்த உயிரினத்தின் பாலையும் எதற்காக குடிக்க வேண்டும்? தயவுசெய்து சைவத்திற்கு மாறுங்கள்" என்ற வாசகமும் இந்த விளம்பர பேனரில் இடம்பெற்றுள்ளது.

இந்த விளம்பரத்திற்கு சைவ உணவு சாப்பிடுபவர்கள், விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பும், பால் உட்பட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. 

”இந்தியா பால் உற்பத்தியில் உலகளவில் முதன்மை நாடாக திகழ்கிறது. பால் உற்பத்திக்காக பசுக்களை வலுக்கட்டாயமாக கருத்தரிப்பு, கன்றுகளை தாய்ப்பசுவிடமிருந்து பிரித்து பணத்திற்காக பாலினை அதிகளவில் கறப்பது போன்ற கொடுமையான செயல்கள் கால்நடை பண்ணைகளில் தினந்தோறும் நடந்தேறி வருகிறது. இதனை வெளிப்படுத்தும் வகையில் தான் இந்த விளம்பர பேனர் அமைக்கப்பட்டுள்ளது” என பீட்டா இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சைவ உணவு முறையினை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் PETA தரப்பில் கூறப்படுகிறது.

சில பயனர்கள் சமூக வலைத்தளங்களில், இந்த விளம்பரத்தை அருவருப்பானதாகவும், வெறுக்கத்தக்கதாகவும் இருப்பதாக விமர்சித்துள்ளனர். மற்றொரு பயனர், உங்களின் கருத்துகளை (பீட்டா இந்தியா) வேறு விதமாக தெரிவித்திருக்கலாம் என்று கமெண்ட் அடித்துள்ளார். பால் மாற்றுப் பொருட்களை (vegan milk) ஊக்குவிக்க, அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஒருசிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பசுவின் பால் ஊட்டச்சத்துமிக்க உணவுப்பொருளாக கருதப்படும் நிலையில், PETA இந்தியா அமைப்பின் விளம்பர பேனரின் நோக்கம் சரியானதா? எனவும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User