பெட்ரோல் பங்க் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த KPY பாலா
இளைஞரின் சோக வீடியோ வெளியான நிலையில் பைக் வாங்கிக் கொடுத்தார்.
பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் இளைஞருக்கு நடிகர் பாலா பைக்கை பரிசளித்த நிகழ்வு காண்பவர் அனைவருக்கும் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகர் பாலா. தனது வருமானத்தில் பெரும் பங்கை பொதுமக்களின் நலனுக்காக பயன்படுத்துவதன் மூலம் ரியல் ஹீரோவாகவும் மாறியுள்ளார். ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வரும் நடிகர் பாலா, தனது சொந்த செலவில் பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களையும் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் இளைஞர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவருக்கு பைக்கை பரிசாக வழங்கியுள்ளார் பாலா. அந்த வீடியோவில் பெட்ரோல் நிரப்ப வந்த நபரின் ஹெல்மெட்டில் இருந்த கேமரா எவ்வளவு என அந்த இளைஞர் கேட்டதற்கு 46 ஆயிரம் ரூபாய் என அந்த நபர் கூறுகிறார். அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த இளைஞர், எங்கள் வீட்டில் பைக் வாங்குவதற்கு 10 ஆயிரம் ரூபாய் கேட்டால் செருப்பால் அடிப்பேன் என்று கூறினார்கள் என சிரித்துக் கொண்டே கூறினார். முகத்தில் சிரிப்பு மனதில் வருத்தம். இரண்டும் கலந்து இளைஞர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களின் நெஞ்சில் முள்ளாய்த் தைத்தது.
இந்த வீடியோவைப் பார்த்த நடிகர் பாலா, இளைஞருக்கு டிவிஎஸ் பைக் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அந்த இளைஞரிடமே சென்று பைக்கிற்கு பெட்ரோல் போட்டுவிட்டு சாவியை அவர் கையில் வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நடிகர் பாலா. மேலும், பணத்தை அவர் சட்டைப்பையில் வைத்துவிட்டு இருவரும் ஒரு குட்டி ரைடு சென்றனர்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். ஆனால், நடிகர் பாலா செய்யும் உதவிகளால், அவர் இறைவனுக்கும் மேல் என நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு கூட உதவி செய்ய மனம் வராத நிலையில், நடிகர் பாலாவின் கொடை மனம் அவரை மக்கள் மனதில் கோட்டை கட்டி அமர்த்துகிறது...
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)