ஸ்டைல் இளவரசியான கிம் ஜாங் உன்னின் மகள்.. வியக்கும் Gen-Z கொரியன்ஸ்..!

வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார். 

Jun 04, 2026 - 12:07
0 312
ஸ்டைல் இளவரசியான கிம் ஜாங் உன்னின் மகள்.. வியக்கும் Gen-Z கொரியன்ஸ்..!

வடகொரியாவில் சமீப காலமாக அதிபர் 'கிம் ஜாங் உன்' எங்கு சென்றாலும், அவருடன் கூடவே ஒரு சிறுமியும் காணப்படுகிறார். அந்தச் சிறுமி வேறு யாருமல்ல... கிம் ஜாங் உன்னின் மூத்த மகள் 'ஜூ ஏ'தான்! வயது வெறும் 13 மட்டுமே! வடகொரியாவை வழிநடத்தப் போகும் அடுத்த தலைவராக, அதிபரின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் 'ஜூ ஏ', சர்வதேச அளவிலும் ஃபேஷன் விஷயத்தில் கவனத்தை ஈர்க்கிறார்.

ஜூ ஏவின் நடை, உடை, அலங்காரம், ஹேர் ஸ்டைல் ஆகியவை ஃபேஷன் அடையாளமாக மாறியுள்ளது. சுமார் மூன்று வருடத்துக்கு முன், முதன் முதலாக 'ஜூ ஏ' தனது தந்தை 'கிம் ஜாங் உன்னுடன் இணைந்து அந்நாட்டு ராணுவ தளத்தில் பிரமாண்ட ஏவுகணை ஒன்றைப் பார்வையிட்டு, நடந்து வரும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஜூ ஏ கறுப்பு டிரவுசர், வெள்ளை ஜாக்கெட் அணிந்து, குதிரைவால் கொண்டையுடன் படு ஸ்டைலாகக் காட்சியளித்தார்.

இந்த இளம் வயதிலேயே ஜூ ஏ-வை தனது தனது அரசியல் வாரிசாக அதிபர் தேர்ந்தெடுத்து, அதற்கேற்பப் பயிற்சியளிக்கிறாராம். அதனால் கம்பீரத்துடன் காட்சியளிக்கும் வகையில் ஜூ ஏவின் ஆடைகள் அந்நாட்டு அரசாங்கத்தின் பிரசார துறையாலேயே டிசைன் செய்யப்படுகிறதாம்.

"ஜூ ஏ இன்னும் சிறுமியாக இருப்பதால், அவரை யாரும் குறைத்து மதிப்பிடாத வகையில், அவரது உடைகள் டிசைன் செய்யப்படுகின்றன. தோற்றத்தில் வலிமையானதாகவும் அதே சமயம் ஸ்டைலாகவும் உள்ள உடைகளை விரும்பி அணிகிறார். அதிலும் லெதர் ஜாக்கெட்கள், ஃபர் கோட்டுகள், ட்ரெஞ்ச் கோட்டுகள் ஆகியவற்றை ஜூ ஏவின் விருப்ப சாய்ஸ்!" என்கிறார்கள், அந்நாட்டு அதிகாரிகள்.

உள்நாட்டில் பொதுமக்களுக்கு ஏகப்பட்ட உடைக் கட்டுப்பாடுகள் மற்றும் கலாசாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிபரின் வாரிசு மட்டும் மேற்கத்திய ஸ்டைல் உடைகள் அணிவதற்கு, மறைமுக எதிர்ப்புகளும் இருக்கின்றன.

"மேற்கத்திய ஆடை என்பதால் வட கொரியாவில் ஜீன்ஸ் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், அதிபர் கிம் ஜாங் உன் மட்டும் விதிவிலக்கு. அதேபோல்தான், அவரது மகள் அணியும் உடைகளும். யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் உயிருடன் இருக்க முடியாது" என்கிறார், வடகொரியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர்.

இருப்பினும், வடகொரிய இளசுகள் மத்தியில் ஜூ ஏ படு பாப்புலர். அவரைப் போலவே அதி நவீனமாக உடையணிய ஜென்-Z தலைமுறை விரும்புவதால், மென் உரோம (ஃபர்) கோட்டுகள், சன்கிளாஸ்கள், லெதர் ஜாக்கெட்டுகளுக்கு படு டிமாண்டாம்!

ஜூ ஏ அரசியலில் கலக்குகிறாரோ இல்லையோ... ஃபேஷன் டிரெண்ட் ஆக மாறியுள்ளார் என்பது மட்டும் நிஜம்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User