விருதுநகர் அரசு விழாவில் பரபரப்பு. பேனர் விவகாரத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆவேசம்!

விருதுநகர் அரசு விழாவில் பேனர் விவகாரத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, தவெக அமைச்சர்களின் உட்கட்சிப் பூசலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

Jun 26, 2026 - 06:26
0 191
விருதுநகர் அரசு விழாவில் பரபரப்பு. பேனர் விவகாரத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆவேசம்!

விருதுநகர் மாவட்டத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்களுக்கு இடையே ஏற்கனவே மறைமுகமாக மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், இன்று அது வெளிப்படையாக வெடித்துள்ளது. விழா பேனரில் தனது பெயர் இரண்டாவதாகப் போடப்பட்டதால், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாகச் சிலம்ப விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்வு, துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ பேனரில், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரான ஜெகதீஸ்வரியின் பெயர் இரண்டாவதாக இடம்பெற்றிருந்தது. அதற்குப் பதிலாக, முதலிடத்தில் அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது.

இதைக் கண்டு கடும் கோபமடைந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, "நிகழ்ச்சிக்கு வராத, அதுமட்டுமன்றி எனது துறைக்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஒருவரின் பெயரைப் பேனரில் முதலில் போட்டிருப்பது என்ன நியாயம்?, நான் வேண்டுமானால் எழுந்து சென்று விடவா" எனக் கேள்வி எழுப்பி, அங்கிருந்த மாவட்ட ஆட்சியருடன் மேடையிலேயே வெளிப்படையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், "இதுபோன்ற தவறுகளைச் செய்யாதீர்கள் என ஏற்கனவே உங்களிடம் பலமுறை அறிவுறுத்தியிருக்கிறேன். ஆனால், அதிகாரிகள் தொடர்ந்து இதே தவறைச் செய்து வருகிறீர்கள்" எனக் கூறி, மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலரையும் நேரில் அழைத்து அமைச்சர் ஜெகதீஸ்வரி கடுமையாகக் கண்டித்தார்.

விருதுநகர் மாவட்ட தவெக அமைச்சர்களுக்குள் நிலவி வந்த உட்கட்சிப் பூசல், தற்போது அரசு விழாவில் அதிகாரிகள் முன்னிலையிலேயே வெளிப்படையாக அரங்கேறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User