அதிமுகவுக்கு மேலும் அதிர்ச்சி... விலகினார் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

Jul 01, 2026 - 07:09
0 218
அதிமுகவுக்கு மேலும் அதிர்ச்சி... விலகினார் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்!

அதிமுகவின் முக்கிய முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையவுள்ள நிலையில், மற்றொரு முன்னாள் அமைச்சரான எம்.எஸ்.எம்.ஆனந்தனும் அதிமுகவிலிருந்து விலகுவதாக இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகல்

நடந்து முடிந்த 2026 சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிமுக சார்பில் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டியிட்டார். ஆனால், அந்தத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சத்யபாமாவிடம் அவர் தோல்வியைத் தழுவினார். தேர்தலில் அதிமுக அடைந்த சரிவைத் தொடர்ந்து, கட்சியில் நிலவி வந்த சூழலால் அதிருப்தியில் இருந்த அவர், தற்போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது என்னுடைய வாழ்வில் நான் கண்ட எல்லா விதமான ஏற்றத்திற்கும் காரணமாக இருந்த இயக்கம். திருப்பூரில் எனக்கு அடையாளம் ஏற்படுத்தி தந்த இயக்கம். அதிமுக எனக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தவர் ஜெயலலிதா.

எளிய தொண்டனாக 1980-ம் ஆண்டில் கட்சியில் இணைந்த எனக்கு கிளை செயலாளர், மாவட்ட பனியன் சங்க செயலாளர், மாவட்ட பேரவை இணை செயலாளர், நகர செயலாளர், மாவட்ட செயலாளர் என கட்சியில் அனைத்து உயரிய பொறுப்புகளையும், 2011 ஆண்டில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் அதனை தொடர்ந்து அமைச்சராகவும் உயரிய பதவிகளை தந்து ஜெயலலிதா அழகு பார்த்தார்.

2016-ல் எனக்கு ஜெயலலிதா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காத போதும் மாவட்ட செயலாளராக 4 தொகுதிகளிலும் வெற்றிக்கு பாடுபட்ட காரணத்தினால் உள்ளாட்சி தேர்தலில் மேயர் பொறுப்பிற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கினார்.

2016 தேர்தலுக்கு பின்பு 22 மாவட்ட செயலாளர்களை ஜெயலலிதா மாற்றிய போதும் என்னை மாற்றாததே அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு எடுத்துகாட்டாக இருந்ததை சுட்டி காட்ட கடமைப்பட்டுள்ளேன். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு மாவட்ட செயலாளராக தலைமை அறிவுறுத்திய பணிகள் அனைத்தையும் செய்து வந்தேன்.

2020 ல் எந்த காரணமுமின்றி எனது மாவட்ட செயலாளர் பொறுப்பு எடுக்கப்பட்ட போதும் தலைமைக்கு விசுவாசமாக பணியாற்றி வந்தேன். 2021 தேர்தலில் பல்லடம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு கட்சியினரின் மேலான உழைப்பால் வெற்றி அடைந்தேன்.

தொடர்ந்து திருப்பூர் மாநகரில் கட்சி பலமிழந்து வருவதை பல முறை தலைமையிடம் சுட்டிக் காட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடாத நிலையே இருந்தது. 2026 தேர்தலில் போட்டியிட்ட போது தான், திருப்பூரில் கட்சியின் உண்மை நிலை தெரிய வந்தது.

தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும் தோல்வி அடைந்த எங்களை போன்ற வேட்பாளர்களுக்கு தலைமை எந்த விதமான ஆறுதல் வார்த்தைகளோ, ஊக்கத்தையோ தரவில்லை. கண் முன்னே எங்களை வளர்த்த இயக்கம் கரைகின்றது அதனை தடுக்க தலைமையும் விரும்புவதில்லை.

என்றுமே தலைமையின் மீது சந்தேகம் வராத வரையில் தான், ஒரு இயக்கத்தில் தொண்டன் சிறப்பாக இயங்க முடியும். ஆனால் இன்றோ தலைமையே இயக்கத்தை பார்க்காமல் தங்களை மட்டுமே காத்து கொள்வதில் அக்கறை காட்டுகிறது. எதிர்கருத்து சொல்பவர்களை எல்லாம் துரோகி பட்டம் சூட்டி வெளியே அனுப்ப தலைமையுடன் ஒரு சுயநல கூட்டம் இயங்கி கொண்டிருக்கின்றது.

நான் என்றும் அதிமுகவை என்னுடைய உயிர்க்கும் மேலாக நேசிக்கின்றேன். ஆனால் தேனுடன் ஒரு துளி விஷத்தை சேர்த்தாலும் விஷம் தான் என்பது போன்று தலைமையின் விடாபடியான குணமும், சுயநல போக்கும் தொண்டர்களான தேனையும் விஷமாக்கிவிடும் என்பது தான் நிதர்சன உண்மை.

தண்டனைகளை தான் நான் தருவேன் என்று தலைமை சொன்னால், யார் தான் கருணையையும், மன்னிப்பை தருவார்கள்?? தன்னை இகழ்ந்தவர்களையும், தாழ்த்தியவர்களையும் கூட அரவணைத்து ஏற்றத்தை தந்தவர் ஜெயலலிதா.

இன்று அனைத்து கட்சிகளும் அதிமுகவினரை அரவணைக்க தயாராக இருக்கும் போது அதிமுகவின் தலைமை நீக்குவதில் தான் கவனம் செலுத்துகிறது. நீண்ட யோசனைக்கு பிறகு அதிமுக எனும் மக்கள் தலைவர்கள் வளர்த்த இயக்கத்தில் இருந்து விடை பெறுகிறேன்.

இது வரை எனக்கு ஆதரவளித்து வந்த கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், செயல் வீரர்களுக்கும், என்னுடைய நன்றிகளை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன். ஜெயலலிதா மறைந்தது முதலே தொடர்ந்து துரோகங்களையே நான் சந்தித்து வந்தவன் என்ற முறையில் எனக்கு துரோகி பட்டம் சூட்ட யாரும் முற்பட வேண்டாம்எனக் குறிப்பிட்டுள்ளார்.

தவெகவில் இணைப்பு?

சென்னையில் நாளை (ஜூலை 2) தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் பிரம்மாண்ட விழா நடைபெறவுள்ளது. ஏற்கனவே எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ள சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் நாளை தவெகவில் இணைய உள்ளனர். இவர்களுடன் இணைந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனும் நாளை தவெகவில் இணையவுள்ளதாகப் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகி வருவது அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User