கார் பந்தயம் நடத்திய திமுக அரசால் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாதா? - எடப்பாடி கண்டனம்

கார் பந்தயத்துக்கு கோடிக்கணக்கில் செலவு செய்த முதலமைச்சரால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி இல்லை எனச் சொல்வது கண்டனத்துக்குரியது எனக் கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. 

Oct 04, 2024 - 13:45
0 314
கார் பந்தயம் நடத்திய திமுக அரசால் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாதா? - எடப்பாடி கண்டனம்
edappadi palanisamy

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு செப்டம்பர் மாதத்துக்கான சம்பளம் இன்னும் வழங்கப்படாமல் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு நிதி ஒதுக்காததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் (சமக்ரா சிக்ஷா) கீழ் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு மத்திய அரசு சார்பில் நிதி வழங்கப்பட வேண்டும். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 573 கோடி ரூபாய் நிதி இன்னும் வழங்கப்படாமல் இருப்பதால் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை காரணமாகவே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கான சம்பளத்தை காத்திருப்புப் பட்டியலில் வைக்க வேண்டியதாயிற்று என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் இதனைக் கண்டித்து தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.


 
“ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி பள்ளிக் கல்வித்துறைக்கு வரவில்லை என்ற காரணம் கூறி நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் என்று சுமார் 32,500 பேருக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

தமிழகத்தின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கக்கூடிய செம்மையான பணியினை மேற்கொள்பவர்கள் ஆசிரியர் சமுதாயத்தினர். அப்படிப்பட்ட மேன்மையான பணியினை மாதம் முழுவதும் செய்துவிட்டு, மாதக் கடைசியில் அதற்கு உண்டான ஊதியத்தை வாங்காமல் வெறுங்கையுடன் வீடு திரும்பும்பொழுது வீட்டு வாடகை, குடும்பச் செலவுகள், வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்துதல் என்று பணத்தை கட்டமுடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் ஆசிரியர் பெருமக்கள்.

தனியார் நடத்திய கார் பந்தயத்திற்கு கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்த மு.க.ஸ்டாலினுடைய திமுக அரசு, மத்திய அரசு நிதி வரவில்லை என்ற காரணம் கூறி ஆசிரியர்களுக்கு சென்ற மாதத்திற்கான சம்பளம் வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, மாநில அரசின் நிதியிலிருந்து சுமார் 32,500 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்காமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்குமாறும், இனி மாதாந்திர சம்பளத்தை நிறுத்தாது வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

What's Your Reaction?

Like Like 5
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User