அங்கித் திவாரியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி! அதிகாரிகள் லஞ்சம் பெறுவது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல - நீதிமன்றம் காட்டம்

அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கு தீவிரமானது - நீதிபதி

Mar 15, 2024 - 20:32
0 176
அங்கித் திவாரியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி! அதிகாரிகள் லஞ்சம் பெறுவது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல - நீதிமன்றம் காட்டம்

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனுவை 2-வது முறையாகத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைகிளை, லஞ்சம் பெறுவதைத் தடுக்க வேண்டிய அமலாக்கத்துறையிலேயே லஞ்சம் ஊடுருவி உள்ளது என்பதை சகித்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர் சுரேஷ்பாபுவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்தாண்டு டிசம்பர் 1-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அங்கித் திவாரி ஜாமின் கோரிய மனுக்களை திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் 2 முறையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை 1 முறையும் தள்ளுபடி செய்தன. தொடர்ந்து, 100 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளேன் எனவும் தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பதால் ஜாமின் வழங்க வேண்டும் எனவும் கூறி 2வது முறையாக உயர்நீதிமன்ற மதுரைகிளையில் அங்கித் திவாரி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த 12-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதி விவேக்குமார் சிங், வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனக் கூறி வழக்கில் இருந்து விலகினார். 

இந்நிலையில் ஜாமின் கோரிய மனு இன்று நீதிபதி தண்டபாணி முன்பு இன்று (மார்ச் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார், அங்கித் திவாரி வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது எனத் தெரிவித்தார். 

இதனைப் பதிவு செய்த நீதிபதி தண்டபாணி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், "அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் இந்த வழக்கு தீவிரமானது. அதிகாரிகள் லஞ்சம் பெறும் செயல்கள் அதிகரித்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. சட்டவிரோத செயல்களையும், லஞ்சம் பெறுவதையும் தடுக்க வேண்டிய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகளில் லஞ்சம் ஊடுருவி உள்ளது என்பதைச் சகித்துக்கொள்ள முடியாது" எனவும் காட்டமாகக் கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User