"ஜல்லிக்கட்டுப் போட்டியில் அரசியல் தலையீடு" - கலெக்டருக்கு 2 வாரம் கெடு...
போட்டியின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்த பின்பு பரிசுகளை அறிவிக்க உத்தரவிட கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு.
கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைகளுக்கு பரிசு வழங்குவதில் அரசியல் தலையீடு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் கடந்த ஜனவரி 24-ல் தமிழ்நாடு அரசு சார்பில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், சிறந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், காளைக்கு முதல் பரிசு வழங்கியதை எதிர்த்து மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், எங்கள் காளை ஜல்லிக்கட்டு களத்தில் சிறப்பாக விளையாடியது. முதல் பரிசு வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், வேறு சிலரின் காளைகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள் வழங்கப்படுவதாக விழா கமிட்டியினர் மற்றும் அரசு அதிகாரிகள் அறிவித்தனர். சிறப்பாக விளையாடி மக்களிடையே பெரும் ஆதரவை பெற்ற நிலையில், அரசியலுக்காக பரிசுகளை தட்டி பறிப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே போட்டியின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்த பின்பு முதல் மூன்று பரிசுகளை அறிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)