ஒரே ஆலயத்தில் சிவ-விஷ்ணு: மாணவர்களே மந்திரம் சொல்லி பூஜை செய்யும் கோயில்!

வாடிப்பட்டியிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள மீனாட்சிபுரம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள ஹரி ஹரன் ஆலயத்தில் சிவ விஷ்ணு பேதம் இன்றி இருவரும் ஒரே தலத்தில் அருளும் வண்ணம் இந்தக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

Jun 17, 2025 - 05:41
0 544
ஒரே ஆலயத்தில் சிவ-விஷ்ணு: மாணவர்களே மந்திரம் சொல்லி பூஜை செய்யும் கோயில்!
hari haran temple located in meenakshipuram

பாண்டிய மன்னர்கள் கோட்டை கட்டி ஆண்ட புராதனப் பெருமை கொண்டது வாடிப்பட்டி. இங்குள்ள சிறுமலை அடிவாரத்தில் குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சியும், அதனையொட்டி ஸ்ரீசாஸ்வதானந்தா சுவாமிகள் நிறுவிய ரமணாஸ்ரமும் உள்ளன.

இந்த ஆஸ்ரமத்தில், விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு பன்னிரு திருமுறைகள், ஆழ்வார்களின் பிரபந்தங்கள், சௌந்தர்யலஹரி உள்ளிட்ட ஸ்லோகங்கல் மற்றும் வேத சாஸ்திர விளக்கங்கள் என்று யாவும் எந்தப் பாகுபாடும் இன்றி கற்றுத் தரப்பட்டு வருகிறது.

இப்படி ஆன்மிகத்தைக் கற்கும் மாணவர்கள், வாடிப்பட்டியிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள மீனாட்சிபுரம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள ஹரி ஹரன் ஆலயத்தில் பூஜைகள், அலங்கார ஆராதனைகள் என்று அனைத்தையும் தாங்களே முன்னெடுத்துச் செய்கிறார்கள் என்பதுதான் வித்தியாசமான விஷயம்.

ஒரே ஆலயத்தில் சிவ- விஷ்ணு:

சிவ விஷ்ணு பேதம் இன்றி இருவரும் ஒரே தலத்தில் அருளும் வண்ணம் அமைக்கப்பட்ட இந்தக் கோயிலுக்கு, 13.07.2006 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. பிரதான தெய்வங்கள் மட்டுமே அங்கே இருந்த நிலையில், அதன் பின்னர் பரிவார தேவதை சன்னதிகள், மகா மண்டபம். முகமண்டபம்,சாலகோபுர முகப்புடன் கூடிய பிரதான வாசல், திருமதில் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு 14.06.2019 அன்று மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.

ஊரின் நடுநாயகமாக கிழக்குப் பார்த்த வண்ணம் கோயில் அமைந்துள்ளது. கிழக்குச் சுற்றில் அரச மரத்தடியில் ஞான சுந்தர விநாயகர் சன்னதி உள்ளது. தென்புறக் கருவறையில் நின்ற கோலத்தில் பெருமாள், நம்பியெம்பெருமாள் என்ற திருநாமத்துடன் சேவை சாதிக்கிறார். திருப்பதி ஏழுமலையானை நினைவூட்டும் திருக்கோலம். நம்பியவர் கோரிக்கையைத் தவறாது நிறைவேற்றுபவர் என்பதால், நம்பியெம்பெருமான் என்றே திருநாமம் சூட்டியுள்ளார்கள்.

அவருக்கு வலதுபுறம் உள்ள கருவறையில் லிங்கேஸ்வர மூர்த்தியாக கைலாசநாதர் தரிசனம் தருகிறார், கருணாமூர்த்தியான இவரை வணங்கினாள், கண்கூடாக நன்மைகள் கிட்டும் என்கிறார்கள். ஈசனுக்கு எதிரே பலிபீடம், நந்தி பீடம் உள்ளன. தெற்குப் பார்த்த வண்ணம் கருணாம்பிகையான அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் மேல் இரு கரங்களில் தாமரை மலர் ஏந்தி கீழ் இரு கரங்களால் அபய வரதம் காட்டிய வண்ணம் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறாள். பெற்ற தாய்க்கு நிகரான பெருங்கருணை உடையவளாக  இவளை ஆராதிக்கிறார்கள் பக்தர்கள்.

சிவன், விஷ்ணு சன்னதிகளுக்கு மத்தியில் நவராத்திரி கொலுமண்டபமும் ஐயப்பன் சன்னதியும் உள்ளன. வாசலில் சித்தி விநாயகர், பாலதண்டாயுதபாணி தரிசனம் கிட்டுகிறது. பெருமாள் சன்னதியின் இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவியும் சன்னதியின் நேர் எதிரே பெரிய திருவடியான கருடாழ்வாரும் உள்ளனர். அதற்கு தெற்கே சிறிய திருவடியான ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் உள்ளார். இந்த சன்னதிகள் அனைத்துமே சான்னித்தியம் நிறைந்தவையாக விளங்குவதால், பக்தர்கள் சிலிர்ப்போடு வணங்குகின்றனர்.

சிறப்பு நிகழ்வுகள் என்ன?

தினமும் இருகால பூஜைகளை, தங்களுக்குக் சுற்றுத் தரப்பட்ட வேத மந்திரங்களைச் சொல்லி ஆகம விதிப்படி மாணவர்களே செம்மையாகச் செய்து வருகின்றனர். சித்திரை தமிழ் வருடப்பிறப்பு, வைகாசியில் கடைசி ஞாயிறு அன்று திருவாசக முற்றோதல், தமிழ் மாதப் பிறப்பு தினங்களில் சபரிமலை ஐயப்பன் சன்னதி நடை திறக்கப்பட்டு பூஜை, ஆடிப்பூரத்தன்று அம்பாளுக்கு வளைகாப்பு, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி கொலு உற்சம் யாவும் சிறப்புற நடக்கின்றன. 

ஸ்ரீராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை மகாதீபம், மார்கழி 30 நாட்கள் திருப்பள்ளியெழுச்சி, மார்கழியில் ஐயப்பன் சன்னதியில் மண்டல பூசை, தைப்பொங்க, மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் என பல்வேறு விழாக்கள் ஆண்டு முழுவதும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. மாத பிரதோஷ வழிபாடும் உண்டு.

மாங்கல்ய வரம். சந்தான - பாக்கியம், வேலை வாய்ப்பு ஆகிய கோரிக்கைகள் நிறைவேறியதற்கு நேர்த்திக்கடனாக பக்தர்கள் நித்ய பூஜைக் குரிய பொருட்களை வாங்கித் தரும் வழக்கம் இங்கே உள்ளது. அது தினம் தினம் தொடர்வதே இத்தல தெய்வங்களின் அருளுக்கு அத்தாட்சி

எங்கே இருக்கு?

திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டி நிலக்கோட்டை நெடுஞ்சாலையில் 12 கி.மீ. பயணித்தால்
ஆர்.மீனாட்சிபுரம் திருத்தலம் வந்தடையலாம். தரிசன நேரம்: காலை 5.50-8; 15.30-8.

(கட்டுரையாளர்: வெ.கணேசன் / பக்தி / 19.06.2025)

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User