அதிமுகவில் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் தளவாய்சுந்தரம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என அறிவிப்பு

Nov 18, 2024 - 17:45
0 296
அதிமுகவில் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்தது சர்ச்சையான நிலையில், அதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு வழங்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக அமைப்புச் செயலாளராகவும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான இருந்த தளவாய் சுந்தரம் கட்சி நிர்வாகிகளுடன் இணக்கமாக செயல்படவில்லை என புகார் எழுந்தது. இந்த சூழலில் விஜயதசமி முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், ஈசாந்திமங்கலத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியை தளவாய் சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இது குறித்தான வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து தளவாய் சுந்தரத்தை கட்சிப் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.இந்த நிலையில், தளவாய் சுந்தரத்தின் கட்சி பதவி பறிக்கப்பட்டது தவறானது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் எதிர்த்து கருத்து தெரிவித்தனர்.

மேலும் ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைப்பது புதிது அல்ல என்றும் வருடந்தோறும் இந்த பேரணியை தொடங்கி வைக்கிறார் என தளவாய் சுந்தரம் ஆதரவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, தளவாய் சுந்தரத்தை தமிழக பாஜக வரவேற்பதாக தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், தளவாய் சுந்தரத்திற்கு அதிமுகவில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “ முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம், கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட காரணத்தால், அதுசம்பந்தமாக உரிய விளக்கம் கேட்டு, 8.10.2024 அன்று அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார். தளவாய்சுந்தரம், அந்நிகழ்வில் கலந்துகொண்டது சம்பந்தமாக வருத்தம் தெரிவித்து தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் தளவாய்சுந்தரம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User