சட்டமன்ற தேர்தலில் நடந்திருப்பது சாகசமோ, சாதனையோ கிடையாது, புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி : ஸ்டாலின் ஆதங்கம் 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நடந்திருப்பது சாகசமோ, சாதனையோ கிடையாது என்றும், புதுவிதமான கவர்ச்சி மாயாஜல சுனாமி என  மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

May 14, 2026 - 09:01
0 434
சட்டமன்ற தேர்தலில் நடந்திருப்பது சாகசமோ, சாதனையோ கிடையாது, புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி : ஸ்டாலின் ஆதங்கம் 
புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி : ஸ்டாலின் ஆதங்கம் 

சட்டமன்ற தேர்தல் தோல்வி தொடர்பாக ஆராய திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசுகையில்: ”என்ன நடந்தாலும், சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதிக்கும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமில்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான்.

நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போது அமைந்திருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் அமைந்திருக்கிறது. அதுவும் நமது கூட்டணியில் வெற்றி பெற்றவர்களின் ஆதரவோடுதான் ஆட்சி அமைந்திருக்கிறது. நமது கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லையே தவிர, கணிசமான வாக்குகள் கிடைத்திருக்கிறது.

வரலாற்றைப் பார்த்தால் ஆட்சியில் இருந்து தோல்வியை சந்தித்த போதெல்லாம் மிகக் குறைந்த இடங்களிலேயே வென்றிருக்கிறோம். தற்போது திமுக 59 இடங்களிலும், கூட்டணியுடன் சேர்த்து 73 இடங்களிலும் வென்றிருக்கிறோம்.தற்போது நம்மை பார்ப்பவர்கள் அனைவரும், திமுக வெற்றி பெற்றுவிடும், அதனால் எனது ஒரு வாக்கில் என்ன நடந்துவிடும் என்று தெரியாமல் போட்டுவிட்டோம் என்று புலம்புகிறார்கள். இப்படி ஒரு கட்சிக்கு வாக்களித்து உட்காற வைத்துவிட்டோம் என்று எண்ணி வருந்துகிறார்கள்.

 இதுதான் நமது 5 ஆண்டுகால ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம். நமது உழைப்புக்கு கிடைத்த சான்று. பொது வாழ்க்கையில் வெற்றி தோல்வி சாதாரணம். ஏற்ற இறக்கங்கள் இருக்கும். மேடு பள்ளங்கள் இருக்கும். அதுதான் அரசியல். மற்றவர்கள் மாதிரி எம்.எல்.ஏ.க்களை நட்சத்திர விடுதியில் ஒளிச்சு வைக்க வேண்டிய பயமில்லாமல் தோல்வியிலும் தைரியமாக இருந்தோம்.

என்னை பொறுத்த வரையில் கடந்த 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்தேன், உங்களையும் உழைக்க வைத்தேன். என் சக்திக்கு மீறி உழைத்தேன். இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனைகளை செய்தோம். தோல்விக்கு யாரையும் கைக் காட்டாதீர்கள், அடுத்தவர் மேல பழி போடாதீர்கள். கட்சித் தலைவர்கள் என்ற முறையில் நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி. சுனாமி என்றால் சாகசமோ, சாதனையோ கிடையாது. பெரும் பாதிப்பு என்ற அர்த்தத்தில் சொல்கிறேன். தமிழ்நாட்டின் நலன்களை பாதித்திருக்கும் சுனாமி பேரழிவு இது. எங்க கோளாறு நடந்துச்சு? எங்க மெத்தனம் ஏற்பட்டுச்சு? என்பதுதான் முக்கியம். இதை ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொருத்தரும் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

தோல்விக்கான காரணங்கள் குறித்து தொகுதிவாரியாக, அனைத்து மட்ட நிர்வாகிகள் மத்தியிலும் கருத்து கேட்க வேண்டும். அவர்கள் குரலுக்கு நாம் காது கொடுக்க வேண்டும். அதற்காக தலைமை சார்பில் கள ஆய்வு குழு அமைக்கப் போகிறேன். அவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்து 20 நாள்களுக்குள் எனக்கு அறிக்கை கொடுப்பார்கள்.

கட்சி தொண்டர்களின் கருத்துகளை பெறப் போகிறேன். அதற்காக தனி இணையதளம் நாளையே அறிவிக்கப்படும். அதில் அனைத்து கருத்துகளையும் தெரிவிக்கலாம். மக்களால் கொடுக்கப்படும் ஆலோசனைகள், கருத்துகளை வைத்து அமைப்பு ரீதியில் மிகப்பெரிய மாற்றத்தை செய்யவுள்ளேன். ஒருவேளை யாராவது, “என்னால் செயல்பட முடியாது” என்று நினைத்தால் மனப்பூர்வமாக முன் வந்து விலகிக் கொள்ளலாம்” இவ்வாறு ஸ்டாலின் பேசினார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User