'முதல்வராக இருந்த உங்களுக்கு சட்டம் தெரியாதா?'... எடப்பாடியை விளாசிய துரைமுருகன்... பரபரப்பு!

எதிர்க்கட்சியினர் அரசை கண்டிக்கும் பதாகையை கையில் ஏந்தி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், சபாநயகர் உத்தரவின்பேரில் அவர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

Jun 21, 2024 - 11:11
0 770
'முதல்வராக இருந்த உங்களுக்கு சட்டம் தெரியாதா?'... எடப்பாடியை விளாசிய துரைமுருகன்... பரபரப்பு!
சட்டப்பேரவை

சென்னை: சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் சரியல்ல; அதனால்தான் வெளியேற்றப்பட்டனர் என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.

மக்களவை தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று கூடியது. அவை கூடியதும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், மறைந்த சட்டப்பேரவை  உறுப்பினர்களின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவை  ஒத்திவைக்கப்ட்டது.

இந்நிலையில், இன்று 2வது நாளாக சட்டப்பேரவை கூடியது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் துக்கம் அனுசரிக்கும் விதமாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும், பாமக உறுப்பினர்களும்  கறுப்பு சட்டை அணிந்து  சட்டப்பேரவைக்கு வந்தனர்.

முதல் வேலையாக, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர்  சபாநாயகர் அப்பாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு  சபாநாயகர் அப்பாவு, ''கேள்வி நேரம் முடிந்தவுடன்  கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி வழங்கப்படும்' என்று கூறினார். ஆனால் இதை ஏற்க மறுத்த அதிமுக, பாஜக, பாமக உறுப்பினர்கள் 'உடனே விவாதிக்க அனுமதி வழங்க வேண்டும்' என்று அமளியில் ஈடுபட்டனர். 

'அமைதியாக உட்காருங்கள்; தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அப்பாவு அவர்களிடம் எச்சரித்தனர். ஆனால் எதிர்க்கட்சியினர் அரசை கண்டிக்கும் பதாகையை கையில் ஏந்தி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், சபாநயகர் உத்தரவின்பேரில் அவர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

குறிப்பாக அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமாரை அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி சென்று அவையில் இருந்து வெளியேற்றினார்கள். இதனை தொடர்ந்து அதிமுகவினர் வெளியேற்றப்பட்டது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, ''கள்ளகுறிச்சி மரணம் தொடர்பாக அனைவரும் விவாதிக்கலாம். கேள்வி நேரம் முடிந்து, கவனஈர்ப்பு தீர்மானத்தின்போது அனைத்து உறுப்பினர்களும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்கலாம். 

ஆனால் இதை ஏற்காமல் அவையின் மாண்பை குறைக்கும் வகையில் நடந்து கொண்டதால் அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிமுக உறுப்பினர்களின் பேச்சுகள் அவைக்குறிப்பில் இடம் பெறாது. அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் முழுவதும் அவை நடவடிக்கையில் ஈடுபட முடியாது'' என்று கூறினார்.

இதேபோல் அதிமுகவினர் வெளியேற்றம் குறித்து மூத்த அமைச்சர் துரைமுருகனும் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ''சட்டப்பேரவையில் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அதே வேளையில் சட்டப்பேரவையில் கேள்வி நேரம் என்பது மிகவும் முக்கியமானது. 

அந்த நேரத்தில் வேறு எந்த விவகாரத்தையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள கூடாது என்பது பேரவையின் விதியாகும். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தவர்; அவருக்கு சட்டம் பற்றி நன்கு தெரிந்திருக்கும். சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் சரியல்ல. வேறுவழியின்றி தவிர்க்க முடியாத காரணத்தால்தான் அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்'' என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User