அடையாறு ஆற்றில் மூழ்கி பலியான சிறுவன்... சோகத்தில் சென்னை ஜாபர்கான்பேட்டை...

Apr 12, 2024 - 11:30
0 199
அடையாறு ஆற்றில் மூழ்கி பலியான சிறுவன்... சோகத்தில் சென்னை ஜாபர்கான்பேட்டை...

சென்னை அடையாறு ஆற்றின் அருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார்- ஜோதி தம்பதியினர். விஜயகுமார் அந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்களுடைய மகன் தனுஷ் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். 

நேற்று ரம்ஜான் பண்டிகை விடுமுறை தினம் என்பதால் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய நண்பர்களுடன் அந்தப் பகுதியில் உள்ள அடையாறு ஆற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக அடையாறு ஆற்றில் தனுஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் இறங்கியுள்ளனர்.

நீச்சல் தெரியாத தனுஷ் ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றதால் தண்ணீரில் மூழ்கினார். இதைக்கண்ட அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். தனுஷை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்களின்  முயற்சி பலனளிக்கவில்லை. அதனால், பயந்து போன தனுஷின் நண்பர்கள் யாருக்கும் சொல்லாமல் அவர்களது வீட்டிற்கு சென்றுவிட்டனர். 

வெகு நேரமாகியும் தனுஷ் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த தனுஷின் பெற்றோர், நண்பர்களிடம் விசாரித்தபோது தான் நடந்த சம்பவம் தெரியவந்தது. அதிர்ந்து போன தனுஷின் பெற்றோர், உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் தெரிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை தீயணைப்புத் துறையினர், உடனடியாக மீட்பு பணியில் களமிறங்கினர். 12 பேர் கொண்ட தீயணைப்புத் துறையினர் அடையாறு ஆற்றில் பைபர் போர்டு உதவியுடன் பாதாள கொக்கி வைத்து சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அடையாறு ஆற்றில் இருந்து சிறுவனின் சடலத்தை கைப்பற்றிய தீயணைப்புத் துறையினர், உடலை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி விடுமுறை தினத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் அடையாற்றில் மூழ்கி பலியான சம்பவம் ஜாபர்கான்பேட்டை பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User