Suriya: ”மாறி மாறி ஆட்சி புரிந்த அரசாங்கங்களே..” திமுக, அதிமுகவை சைலண்டாக அட்டாக் செய்த சூர்யா!

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் விவகாரத்தில் நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Jun 21, 2024 - 17:15
Updated: 2 years ago
0 286
Suriya: ”மாறி மாறி ஆட்சி புரிந்த அரசாங்கங்களே..” திமுக, அதிமுகவை சைலண்டாக அட்டாக் செய்த சூர்யா!

சென்னை: தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சூர்யா, தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா, விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் அருந்தியதில் 52 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நடிகரும் தவெக தலைவருமான விஜய், கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். 

முக்கியமாக விஜய் ஆளும் திமுக அரசு மீது நேரடியாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், இந்த விவகாரத்தில் சூர்யா மட்டும் அமைதி காப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. அதாவது திமுகவுக்கு ஆதரவாக மட்டுமே குரல் எழுப்பி வரும் சூர்யா, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பேரழிவு குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து சூர்யா தற்போது கள்ளச் சாராய சம்பவம் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் கூட நடக்காத துயரம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது. விஷச் சாராயத்திற்கு அன்பிற்குரியவர்களைப் பலிகொடுத்துவிட்டு அழுது துடிப்பவர்களுக்கு எத்தகைய வார்த்தைகளில் ஆறுதல் சொல்லிவிடமுடியும்?.  தற்போது அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஊடகங்கள், மக்கள் என அனைத்து தரப்பினரின் கவனமும் கவலையும் கோபமும் அதிகரித்திருக்கிறது. அரசும் ஆட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு இழப்பைக் குறைக்க போராடிக் கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், நீண்டகால பிரச்சினைக்கு குறுகிய கால தீர்வு என்கிற இந்த வழக்கமான அணுகுமுறை நிச்சயம் பலனளிக்காது. 

கடந்தாண்டு இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை குடித்து 22 பேர் பலியானார்கள். அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. இப்போது பக்கத்து மாவட்டத்தில் அதே மெத்தனால் கலந்த விஷச் சாராயம் குடித்து கொத்து கொத்தாக மக்கள் இறந்திருக்கிறார்கள். இப்போது வரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. வாழ்வை மேம்படுத்துவார்கள் என நம்பி வாக்களிக்கும் தமிழ்நாட்டு மக்களை, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி நம்மை ஆட்சி புரிந்த அரசாங்கங்களே டாஸ்மாக் வைத்து மக்களை குடிக்க வைக்கிற அவலத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

’மதுவிலக்கு கொள்கை’ என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்து பேசுபொருளாக மட்டுமே முடிந்துவிடுகிறது. டாஸ்மாக்கில் 150 ரூபாய்க்கு குடித்து போதைக்கு அடிமையானவர்கள் பணம் இல்லாதபோது 50 ரூபாய்க்கு கிடைக்கும் விஷச் சாராயத்தை வாங்கி குடிக்கின்றனர். குடிக்கு அடிமையானவர்களின் பிரச்சினை என்பது தனிநபர் சார்ந்தது அல்ல. அந்த ஒவ்வொரு குடும்பத்தின், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சினை என்பதை எப்போது நாம் உணரப் போகிறோம்?. அரசாங்கங்களே குடிப் பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்தி வரும் வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்க மாவட்டம் தோறும் மறுவாழ்வு மையங்களைத் தொடங்கி அவர்களை குடிநோயில் இருந்து மீட்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் முன்னேற அரசு எத்தகைய தொலைநோக்கு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறதோ, அதேபோல குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் மறுவாழ்விற்கு முன்னுதாரணமான திட்டங்களை வகுத்து ஓர் இயக்கமாகவே செயல்படுத்த வேண்டும். அரசும் அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இதுபோன்ற அவல மரணங்களைத் தடுக்க முடியும். குறுகிய கால தீர்வை கடந்து முதலமைச்சர் மதுவிலக்குக் கொள்கையில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பார் என மக்களோடு சேர்ந்து நானும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். 

சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச் சாராயத்தை தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம். இறந்த உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் இருப்பவர்கள் மீண்டு வர பிரார்த்தனை. இனி ஒரு விதி செய்வோம்! அதை எந்நாளும் காப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை வெளியானது முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், சூர்யா இதனை நேற்றே செய்திருக்க வேண்டும், இப்போதும் கூட திமுகவை நேரடியாக விமர்சிக்கவோ குற்றம்சாட்டவோ இல்லை என ட்ரோல் செய்து வருகின்றனர். இதுவே அதிமுக அரசின் ஆட்சி காலத்தில் தொட்டதுக்கெல்லாம் குறை கூறிய சூர்யா, இப்போது மட்டும் இப்படி அடக்கி வாசிப்பதாகவும் அவர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User