சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து.. தாய் வைத்த கோரிக்கை.. சென்னை ஹைகோர்ட் புது உத்தரவு!

சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாய் அளித்த விண்ணப்பத்தை 2 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என, சிறைத் துறைக்கு சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

May 09, 2024 - 17:13
0 482
சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து.. தாய் வைத்த கோரிக்கை.. சென்னை ஹைகோர்ட் புது உத்தரவு!

காவல்துறை அதிகாரிகள்,  பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.  பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  

அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனி செட்டிபட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக கோவையிலிருந்து,  பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். 

நீதிபதி செங்கமலச்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது,  கோவை சிறையில் 10 காவலர்கள் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும்,  கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பில்லை என்றும் கூறினார்.  தனது பாதுகாப்பிற்காக மதுரை சிறைக்கு தன்னை மாற்றுமாறு சவுக்கு சங்கர் கோரிக்கை விடுத்தார்.  அதற்கு பதிலளித்த நீதிபதி,  வேறு சிறைக்கு மாற்றுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை.  ஆகவே சிறைத்துறைக்கு கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்து பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள் என கூறினார்.

பின்னர் இந்த வழக்கில் சவுக்கு சங்கரை மே 22 வரை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  நீதிமன்ற விசாரணை முடிவடைந்த்தை அடுத்து, சவுக்கு சங்கரை கோவை சிறைக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில்,  கோவை சிறையில் சவுக்கு சங்கர் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் சிறை மாற்ற கோரி சவுக்கு சங்கர் தாயார் கமலா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.  இந்த மனு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா,  கலைமதி அமர்வு முன்பு மறு விசாரணைக்கு வந்தது.  

அப்போது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  அந்த அறிக்கையில், சவுக்கு சங்கருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து விளக்கப்பட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து அரசுத்தரப்பில், சட்டப் பணிகள் ஆணைக் குழு அறிக்கையின் அடிப்படையில்,  சவுக்கு சங்கருக்கு மருத்துவ சிகிச்சை அவசியம் என்பதால்,  அவருக்கு உரிய சிகிச்சை வழங்கும்படி,  கோவை சிறை நிர்வாகத்துக்கு கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும் அதன் அடிப்படையில்,  இன்று அவர் புறநோயாளியாக சிகிச்சைக்கு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சவுக்கு சங்கரின் தாய் தரப்பில்,  தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும்,  அவரை வேறு சிறைக்கு மாற்றக்கோரி சிறைத்துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளதாகவும்,  அந்த
விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி உத்தரவிட வேண்டும் எனவும்,  இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க அனுமதி வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு விட்டதாகக் கூறி,  சங்கரின் தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கை முடித்து வைத்தனர்.  மேலும், சிறை மாற்றக் கோரி சவுக்கு சங்கரின் தாய் அளித்த விண்ணப்பத்தை 2 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என, சிறைத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User