சபரிமலை நெய் திருட்டு விவகாரம்: திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரி கைது
‘அதிய சிஷ்டம்’ எனப்படும் 13,765 நெய்ப் பொட்டலங்களைக் கள்ளத்தனமாக விற்றதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன், சேமிப்பில் இருந்த 22,565 நெய்ப் பொட்டலங்களும் மாயமானதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்தானம் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நெய் விற்பனையில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். இதையடுத்து கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது, நெய் விற்பனையில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சபரிமலை மண்டலப் பூசைக் காலகட்டத்தின்போது, 89,300 நெய்ப் பொட்டலங்கள் விற்பனை முகப்புகளுக்கு விநியோகிக்கப்பட்டன. அவற்றுள் 143 பொட்டலங்கள் சேதமடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எஞ்சிய 89,157 பொட்டலங்களை விற்றதன்மூலம் ரூ.89.12 லட்சம் திரட்டப்பட்டது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 27ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட தணிக்கையின்போது, 75,450 நெய்ப் பொட்டலங்களை விற்றதற்கான ரூ.75.45 லட்சம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது 100 கிராம் அளவுள்ள 13 ஆயிரத்து 679 பாக்கெட் நெய் விற்பனை செய்யப்பட்டு திருவிதாங்கூர் தேவஸ்தான கருவூலத்திற்கு வர வேண்டிய ரூ.13 லட்சத்து 67 ஆயிரத்து 900 மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. நெய் விற்பனை மோசடி தொடர்பாக உதவி அர்ச்சகர்கள் உள்பட 33 பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக நெய் விற்பனை பொறுப்பில் இருந்த அதிகாரி சுனில்குமார் போற்றியை திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்திருந்தது. இந்த நிலையில் கேரள ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று சுனில்குமார் போற்றியை கைது செய்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)