வடகிழக்கு பருவமழை விலகியது: ஆனால் பனிமூட்டம் தொடரும், வானிலை ஆய்வு மையம் 

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து வடகிழக்கு பருவமழை  விலகியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

Jan 19, 2026 - 09:10
0 238
வடகிழக்கு பருவமழை விலகியது: ஆனால் பனிமூட்டம் தொடரும், வானிலை ஆய்வு மையம் 
வடகிழக்கு பருவமழை விலகியது

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று விலகியது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 23 முதல் 25ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை குறைந்தபட்ச வெப்பநிலையில் மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி - இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்)  நாளையும் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User