தமிழ்நாட்டையே உலுக்கிய கல்குவாரி வெடி விபத்து- 2 உரிமையாளர்கள் கைது !

May 01, 2024 - 15:48
0 271
தமிழ்நாட்டையே உலுக்கிய கல்குவாரி வெடி விபத்து- 2 உரிமையாளர்கள் கைது !

தமிழ்நாட்டையே உலுக்கிய விருதுநகர் கல்குவாரி வெடி விபத்தில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், குவாரியை நிரந்தரமாக மூட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பாறை உடைக்கும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்களை தவறாக கையாண்டதாலேயே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் வெடி விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதற வைத்திருக்கிறது.

இந்த பயங்கர வெடிவிபத்தால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை அதன் அதிர்வுகள் ஏற்பட்டதாக மக்கள் பதற்றமாக கூறினர். 1 கிலோ மீட்டர் தாண்டி மனித உடலானது சிதறிக்கிடந்த நிலையில், தற்போது வரை 3 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே, வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் வெடிக்காத வெடிப்பொருட்கள் சிதறி இருக்க வாய்ப்புள்ளதாகவும், அதனை ஆய்வு செய்து செயலிழக்க செய்த பின்னரே ஆய்வு செய்யப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது அங்கிருந்த வெடிக்காத ஆயிரத்து 200 கிலோ வெடிப்பொருட்கள் காவல்துறையினரால் கைப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏற்கெனவே நடந்த அசம்பாவித சம்பவங்களின்போது குவாரி சில தினங்களுக்கு மூடப்பட்டு, பின் திறக்கப்பட்டுவிடும் எனக் கூறும் காரியாப்பட்டி கிராம மக்கள், இம்முறை நிரந்தரமாக குவாரியை மூடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

மக்களின் போராட்டத்தை அடுத்து, குவாரி உரிமையாளர்களான சேது மற்றும் ஸ்ரீ ராம் ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்திருக்கின்றனர். மேலும் தலைமறைவாக மூன்று மேலாளர்களை போலீசார் தேடி வருகின்றனர். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த கோர சம்பவத்தில் முறையான விசாரணை நடத்த வேண்டுமென அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User