திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  மாசித்திருவிழா தேரோட்டம் - விண்ணை முட்டிய அரோகரா கோஷம்

மாசி திருவிழாவின் தெப்ப உற்சவம் நாளை இரவு நடைபெறுகிறது.

Feb 23, 2024 - 10:11
Updated: 2 years ago
0 201
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  மாசித்திருவிழா தேரோட்டம் - விண்ணை முட்டிய அரோகரா கோஷம்

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி  வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 

12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும்  காலை மற்றும் மாலையில் சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம் நாள் திருவிழா அன்று சுவாமி சண்முகர் தங்கச் சப்ரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

தொடர்ந்து  8-ம் நாள் திருவிழா அன்று சுவாமி சண்முகர் பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழா நாட்களில் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சூரிய காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும், வேல் குத்தியும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் இன்று காலையில் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விசுவரூப தீபாரானையும், 5 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து மாசித்திருவிழா தேரோட்டம் தொடங்கியது. முதலில்  விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த தேரானது ரதவீதி நான்கிலும் பவனி வந்து  நிலையம் வந்து சேர்ந்தது. அதனைத்தொடர்ந்து  சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர் புறப்பட்டது. 

அதனை தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் 'அரோகரா' பக்தி கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து தேர் ரதவீதி நான்கிலும் பவனி வந்து நிலையம் வந்து சேர்ந்தது. தொடர்ந்து தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் புறப்பட்டு ரதவீதிகளில் பவனி வந்து நிலையம் வந்து சேர்ந்தது.இந்த தேரோட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாசி திருவிழாவின் தெப்ப உற்சவம் நாளை இரவு நடைபெறுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User