வைகையில் இறங்கும் கள்ளழகர்.. தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடுகள்.. மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது உயர் அழுத்த மோட்டார் வைத்து தண்ணீர் பீய்ச்சி அடிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தண்ணீர் பை வைத்து பீய்ச்சி அடிப்பவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Apr 03, 2024 - 14:06
0 401
வைகையில் இறங்கும் கள்ளழகர்.. தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடுகள்.. மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரையில் சித்திரை திருவிழா வரும் 12ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. சித்திரை மாதத்தில் மதுரையில் நடைபெறும் திருவிழா 15 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெறும். உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மீனாட்சி திருக்கல்யாணம், சித்திரை தேரோட்டம் என 22ஆம் தேதி வரைக்கும் நடைபெறும்.

அழகர் கோவிலில் சித்திரை திருவிழா வரும் 19ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 27ஆம் தேதி வரைக்கும் நடைபெறும். அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வரும் 21ஆம் தேதியன்று மதுரைக்கு புறப்படுகிறார். மூன்று மாவடி அருகே அழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடைபெறும். 23ஆம் தேதியன்று அதிகாலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்வார்கள். கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பார்கள்.

இந்த நிலையில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 
கள்ளழகர் மலையில் இருந்து வைகை ஆறு வரும் வரை இடையே எந்த இடத்திலும் தண்ணீர் பீச்சி அடிக்க கூடாது எனவும் இதனை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதுரை மாநகர காவல் துறை ஆணையர் இதனை  உறுதிப்படுத்த வேண்டும் எனவும், பெண்கள் குழந்தைகள் முதியோர்கள் மீது தண்ணீர் பீச்சி அடிக்க தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரையை சேர்ந்த நாகராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. நாகராஜன் தனது மனுவில், உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரைத்திருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. பாரம்பரியமாக ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல்பைகளில் நறுமண நீர் நிரப்பி துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பக்தர்கள் பீய்ச்சி அடிப்பார்கள். பக்தர்கள் விரதமிருந்து தோல்பையில் தண்ணீர் சுமந்து வந்து சிறிய குழாய் மூலம் சுவாமியின் மீது பீய்ச்சி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். 

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் ஐதீகத்தை மீறி தோல் பையில் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகளை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருள்களை கலந்து பீய்ச்சுவதால் கள்ளழகர் சுவாமி, தங்கக்குதிரை வாகனம் மற்றும் சுவாமியின் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் திரவியம் மற்றும் வேதிப்பொருள்கள் கலந்த தண்ணீரால் பட்டர்கள், பிரசாரகர் பணியாளர்கள், பெண்கள்  மற்றும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த ஆண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்ச தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் என்பது உலக பிரசித்தி பெற்ற ஒன்றாகும் இந்த விழாவில் பாரம்பரியமாக கள்ளழகர் வேடமனிந்து தண்ணீர் பீச்சி அடிப்பது என்பது நடந்து வருகிறது தற்போது இது பெண்கள் குழந்தைகள் மீது  ஒரு சில இளைஞர்கள் தவறுதலாக வேண்டுமென்றே அடித்து துன்புறுத்து வருகின்றனர்.

இது போன்ற துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பது சட்டத்தின் கடமையாக உள்ளது. எனவே இனி இந்த விவகாரம் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும். பாரம்பரிய உடை அணிந்து தண்ணீர் பீச்சி அடிப்பவர்கள், மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் அதுவும் அவர்களின் முன் அனுமதி பெற்றோர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.

மேலும் கள்ளழகர் மலையிலிருந்து இறங்கி வரும் வழிகளில் எங்குமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க அனுமதிக்க கூடாது ஆற்றில் இறங்கும் போது மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள் குழந்தைகள் முதியோர் மீது தண்ணீர் பீச்சி அடிப்பதை காவல் துறையினர் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

எனவே இந்த விதிகளை முறையாக பின்பற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக மதுரை மாநகர காவல் துறை ஆணையர் மற்றும்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் இந்த உத்தரவு இந்த வருடத்திற்கு மட்டுமானது  அல்ல இனி எதிர்காலங்களில் இந்த உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User