நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக இருந்த காளியம்மாள் இன்று அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்துள்ளார்.

Mar 13, 2026 - 06:49
0 493
நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ஆட்சியைப் பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணியும், ஆட்சியைத் தக்கவைக்க திமுக கூட்டணியும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி மீனவர் நல அமைப்பைத் தொடங்கப்போவதாகக் கூறப்பட்ட காளியம்மாள், இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், தனது ஆவேசமான பேச்சுகளால் மக்கள் மத்தியில் பிரபலமானவர். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னையில் 60,000 வாக்குகளையும், 2024 தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் 1,20,000 வாக்குகளையும் பெற்று கவண் ஈர்த்தார்.

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் காளியம்மாளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2025 பிப்ரவரி மாதம் அவர் அக்கட்சியிலிருந்து விலகினார். அவரைத் தங்கள் கட்சியில் இணைக்க திமுக, தவெக உள்ளிட்ட பல கட்சிகள் ஆர்வம் காட்டிய நிலையில், பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அவர் அதிமுகவில் இணைந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுகவில் இணைந்தது ஒருங்கிணைந்து எடுத்த முடிவு. எனது தனிப்பட்ட முடிவு அல்ல. ஒரு தமிழனின் தலைமையில் இயங்கவே அதிமுகவில் இணைந்திருக்கிறேன். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்தேன். எனக்கு பொறுப்பு வழங்குவது குறித்து கட்சித் தலைமை முடிவுசெய்யும்" என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User