மதுரை மீனாட்சியம்மன் செங்கோல் விவகாரம் : "அது எப்படி பண்ணலாம்..?" - 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிரடி..

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செங்கோலை வாங்கும் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Apr 18, 2024 - 22:03
0 213
மதுரை மீனாட்சியம்மன் செங்கோல் விவகாரம் : "அது எப்படி பண்ணலாம்..?" - 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிரடி..

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 12 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், நாளை (ஏப்ரல் 19) மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது.  பட்டாபிஷேகத்தின் போது, செங்கோல் மீனாட்சியம்மனின் கைகளில் ஒப்புவிக்கப்படும். அந்த செங்கோலை அறங்காவலர் குழுவின் தலைவர் பெற்றுக் கொள்வார். 

இந்நிலையில் அந்த செங்கோலை திருமணம் ஆகாதவரோ, கணவன் அல்லது மனைவியை இழந்தவரோ பெற்றுக்கொள்ள இயலாது என்றும், அது ஆகம விதிகளுக்கு எதிரானது என மதுரையைச் சேர்ந்த தினகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, திருமணம் ஆகாதவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாது என்று ஆகம விதிகளில் எங்கு உள்ளது? எனவும், கோவிலினுள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்து தானே? என கேள்வி எழுப்பியதுடன், மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார். 

இதனை தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மதுரையை சேர்ந்த தினகரன் என்பவர் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கானது நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், "கோவிலின் நிகழ்வுகளில் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். சீதலக்குறிப்பேடு சுவடியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது" என வாதிடப்பட்டது.

மேலும், அரசு தரப்பில்  கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி தனி நீதிபதியின் உத்தரவு தெளிவாக உள்ளது அதில் தலையிட வேண்டியதில்லை என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "அக்காலத்தில் என்ன நிகழ்ந்தது என்பது தெரியாது என்றும், நூல்களின் அடிப்படையில் நீதிமன்றம் முடிவுக்கு வர இயலாது எனவும் தெரிவித்தனர். ஆகம விதிகளில் வேறு ஏதேனும் குறிப்புகள் உள்ளதா? இதனை மட்டும் தான் பின்பற்ற வேண்டுமா? இம்முறை வழக்கத்தில் இருந்ததா? என்பவை குறித்து ஒரே இரவில் முடிவுக்கு வர இயலாது எனக்கூறிய நீதிபதிகள், மனுதாரர் கோரும் நிவாரணத்தை இந்த ஆண்டு வழங்க இயலாது என தெரிவித்தனர். 

மேலும், ஆகம விதிகளில் நீதிபதிகள் நிபுணர்கள் அல்ல என்பதால், தற்போது எந்த முடிவையும் எடுக்க இயலாது என குறிப்பிட்ட நீதிபதிகள், ஆகம  விதிகள் குறித்து முறையாக ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள் அதனை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் முடிவு எடுக்கலாம் என்றும் கூறினர். 

எனவே இந்த வருடம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவில் தடை விதிக்க முடியாது என்றும் கூறி, வழக்கை ஜூன் மாதம் ஒத்திவைத்தனர். மேலும், இந்த ஆண்டு வழக்கம் போல் நிகழ்வை நடத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User