அரசை நடத்த எங்களை விட  முதல்வர் விஜய் குறைவாக கடன் வாங்கினால் பதவி விலகுகிறேன்: தங்கம் தென்னரசு சவால் 

திமுக ஆட்சியில் வாங்கிய கடனைவிட தவெக ஆட்சியில் குறைவாக கடன் வாங்கினால் தான் பதவி விலகுவதாக முதல்வர் விஜய்க்கு தங்கம் தென்னரசு சவால் விட்டுள்ளார். 

Jun 17, 2026 - 09:06
0 245
அரசை நடத்த எங்களை விட  முதல்வர் விஜய் குறைவாக கடன் வாங்கினால் பதவி விலகுகிறேன்: தங்கம் தென்னரசு சவால் 
முதல்வர் விஜய்க்கு தங்கம் தென்னரசு சவால்

நிதியமைச்சர் மரியம் வில்சன் தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இதுகுறித்து  அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ”இந்த வெள்ளை அறிக்கை என்பது வெறும் வெற்று அறிக்கையாகும். இதன் நோக்கம், தவெக அரசு தனது இயலாமையை மூடி மறைக்கக் கூடிய உக்தியாக இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வழி தெரியாமல், கையை விரித்து மக்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ள திமுக மீது பழிச் சொல்லும் முயற்சியாகதான் இருக்கிறது.

வெள்ளை அறிக்கை வெளியீடு என்பது முதல்முறை இல்லை. இதற்கு முன்னதாக இரண்டு முறை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலும், 2021 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியிலும் வெள்ளை அறிக்கை வெளியிட்டார்கள். தற்போது தவெக வெளியிட்டுள்ளது.

த.வெ.க. ஆட்சி ஒருவேளை 5 ஆண்டுகளை நிறைவு செய்தால், 5 ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இதை ஒரு சவாலாகவே சொல்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. அரசு ஒவ்வொரு ஆண்டும் வாங்கிய சராசரி கடனை விட, த.வெ.க. அரசு குறைத்து வாங்கினால், நான் பொறுப்பில் இருந்தே விலகிவிடுகிறேன்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் உள்பட தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் மூலதன திட்டங்களை எல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு, திமுக அரசு மூலதன திட்டங்களுக்காக செலவிடவில்லை எனக் கூறுகிறது த.வெ.க. அரசு. காலை உணவுத் திட்டம் போன்ற தமிழ்நாட்டில் உள்ள பல மக்கள் நலத் திட்டங்கள் குஜராத்தில் கிடையாது.த.வெ.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றும் என்பதை, பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்திலேயே எல்லோரும் பார்த்தோம். இடைக்கால பட்ஜெட்டிலேயே அரசின் நிதி நிலைமையை தெளிவாக குறிப்பிட்டோம். 

 

அதற்குப் பிறகுதான் த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இப்போது வாக்குறுதிகளை நிறைவேற்ற வழியில்லாமல் காரணங்களைக் கூறி தப்பிக்கப் பார்க்கிறார்கள். நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.6 லட்சம் கோடி தேவைப்படும். உங்கள் ஆட்சி முடிவில் அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இதையும் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். அப்போது என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதையும் பார்க்கத்தான் போகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User