இனி செந்தில்பாலாஜி சிறைக்குள் தான்? நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்..! அடுத்த கட்ட நடவடிக்கை இதுதானா?

Feb 16, 2024 - 17:15
0 821
இனி செந்தில்பாலாஜி சிறைக்குள் தான்? நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்..! அடுத்த கட்ட நடவடிக்கை இதுதானா?

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 20ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை ஜனவரி 12.ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. கைதாகி 250 நாட்கள் கடந்த நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், வழக்கு ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதா? என்பதை விசாரணையில் தான் நிரூபிக்க முடியும் என முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு என மனுவில் கூறப்பட்டிருந்தது.  சந்தர்ப்ப சூழ்நிலை மாறவில்லை, சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ளார் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறிய நிலையில், ஆவணங்கள் திருத்தப்பட்டதே, சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றமாகக் கருதுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டது. 

இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான், வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தி வருவதாகவும், வழக்கின் விசாரணையை துவங்க அமலாக்கத் துறை தயாராக இருக்கும் நிலையில், செல்வாக்கான அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து மீண்டும் இந்த ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ள அமலாக்கத் துறை, செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆரம்பகட்ட ஆதாரங்கள் இருப்பதாக முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளன. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளார். ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு எனவும் பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.  மேலும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், "சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் 45-வது பிரிவின்படி, குற்றம் புரிந்திருக்கவில்லை என நீதிமன்றம் திருப்தியடையும் வகையில் நிரூபிக்க வேண்டும். செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் நியாயமான சந்தேகம் உள்ளது. டிஜிட்டல் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளது குறித்து விசாரணையின் போது தான் நிரூபிக்க முடியும் என அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு.  திருத்தப்பட்ட ஆதாரங்களை நீக்கி விட்டால் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் சந்தேகத்துக்கு இடமின்றி அவர் விடுதலை செய்யப்பட வேண்டும்" என வாதிட்டார்.

தொடர்ந்து அமலாக்க துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்,  "எந்த ஆதாரங்களும் திருத்தப்படவில்லை. ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து தான் பெறப்பட்டன" என பதில் வாதத்தை முன்வைத்தார். பின்னர் அமலாக்கத்துறை வாதத்திற்காக விசாரணை வியாழக்கிழமை பிற்பகலுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்தி வைத்தார். இந்நிலையில் மூன்றாவது நாளாக ஆஜராகி வாதத்தை முன்வைத்த  அமலாக்கத்துறை, "செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம் சாட்டுவதை போல் எந்த ஆவணங்களும் திருத்தப்படவில்லை. அனைத்து ஆவனங்களும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து தான் உரிய அனுமதியுடன் பெற்றோம். செந்தில் பாலாஜியிடமிருந்து பென் டிரைவ் மற்றும் ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை மத்திய குற்றப்பிரிவு பறிமுதல் செய்து சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. பதவிக்கு ஏற்றவாறு, 2 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை என மொத்தம், 67 கோடி  வசூலித்து மோசடி செய்துள்ளனர். செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர தற்போது வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 

ஜாமீன் மனு விசாரணை துவங்குவதற்கு ஒரு நாள் முன் தான் ராஜினாமா செய்துள்ளார். சாட்சிகள் இன்னும்   விசாரிக்கப்படாத நிலையில்  ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க கூடும். 30 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் ஜாமீனில் விடுதலையானால் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என நம்ப எந்த காரணமும் இல்லை. சாட்சி விசாரணை துவங்க அமலாக்க துறை தயாராக உள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது" என தெரிவித்தார். இதனை பரிசீலித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில்பாலாஜி தரப்பு பதில் வாதத்திற்காக வழக்கின் விசாரணையை பிப்ரவரி 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதனிடையே, செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 20ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 21ஆவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User