தலையங்கம்: கண்களை விற்றா சித்திரம் வாங்குவது!

பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகேயுள்ள மதுக்கடைகளை அகற்றும் உத்தரவை முழுமையாக அமல்படுத்தி, கஜானா நிலவரம் மற்றும் வாக்குறுதிகள் குறித்த வெளிப்படையான அறிக்கையை தவெக அரசு வெளியிட மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

May 19, 2026 - 12:21
0 452
தலையங்கம்: கண்களை விற்றா சித்திரம் வாங்குவது!
தலையங்கம்

முதல் சுட்டமாகப் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றின் அருகே இருக்கும் மதுக் கடைகளை அகற்றும் உத்தரவைப் போட்டிருக்கிறார் தமிழ்நாட்டின் புதிய முதல்வர் ஜோசப் விஜய். இந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்பட்டதா என்பதற்கான ஆதாரங்களை அரசு தரப்பிலிருந்து தெளிவாக வெளியிட வேண்டியது அவசியம்!

அதுபோலவே, மதுக் கடைகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்து. ஒரு கட்டத்தில் இல்லாமலே ஆக்குவதற்கான வேலைகளையும் இந்த அரசு தொடங்க வேண்டும். 'அரசுக்கு வருமானம்' என்று சாக்கு சொல்லி மதுக்கடைகளை நடத்துவது. கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதற்குச் சமம்!

தி.மு.க. ஆட்சியின் தோல்விக்கான முக்கியக் காரணமே, அவர்கள் கவர்ச்சிகரமான பல திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தியபோதும், தேர்தலுக்கு முன்பு அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், நிறைவேற்ற முடியாமல் போனதுதான். 'டாஸ்மாக்' கடை மூடல் வாக்குறுதியும் அதில் ஒன்று!

ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததுமே 'நான் வெள்ளை அறிக்கை வெளியிடப் போகிறேன்' என்றார் முதல்வர் விஜய். கடந்த ஆட்சியின் செயல்பாடுகள் பற்றிய அறிக்கையை வெளியிடும் அதே நேரம், தங்கள் ஆட்சியின் செயல்திட்டங்கள் பற்றியும் குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது ஒரு வெளிப்படையான அறிக்கையை அவர் வெளியிடு வாரேயானால், 'இது சொல்வதைச் செய்யும் அரசுதான்" என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும்.

அரசாங்க கஜானாவின் நிலவரம் என்னவென்று இந்நேரம் முதல்வர் அறிந்திருப்பார். எந்தெந்த வாக்குறுதிகளை உண்மையாகவே நிறைவேற்ற முடியும். அவற்றை எந்தக் காலகட்டத்துக்குள் நிறைவேற்ற முடியும் என்பது குறித்த வெளிப்படையான ஒரு வாக்குமூலத்தை இந்த அரசிடம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எதிர்பார்ப்புக்கும் ஏமாற்றத்துக்கும் இடையிலான இடைவெளிதான் ஒரு கட்சியின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கிறது. மக்களே எஜமானர்கள்! மாற்றம் என்பது ஏற்றமாக இல்லாமல், ஏமாற்றமாக மாறுமேயானால், அந்த எஜமானர்களின் கோபம் எதில் போய் முடியும் என்பதற்கு, நடந்து முடிந்த தேர்தலே சாட்சி!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User